
மத்தியப் பிரதேசத்தின் கனமழை காரணமாக கட்டுமானத்தில் உள்ள வீடு இடிந்து விழுந்ததில் 2 மாதக் குழந்தை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாநிலத்தின் தார் மாவட்டத்தில் வியாழக்கிழமை அதிகாலை பெய்த கனமழையால் கட்டுமானத்தில் இருந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு மாதக் குழந்தை உயிரிழந்தது. அவரது தந்தை காயமடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
மாவட்ட தலைமையகத்திலிருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள பிதாம்பூர் நகரில் அமைந்துள்ள வீட்டில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாக உள்ளூர் காவல் நிலைய அதிகாரி ஓம் பிரகாஷ் அஹிர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கனமழையைத் தொடர்ந்து, கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் உள்ள ஒரு சுவர் பலவீனமடைந்த நிலையில் அதிகாலை 2 மணியளவில் இடிந்து விழுந்ததாகவும், பிறந்து இரண்டு மாதமேயான குழந்தை பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
சம்பவத்திற்குப் பிறகு, குழந்தையும் அவரது தந்தையும் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர், அங்கு சாக்ஷி என அடையாளம் காணப்பட்ட குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, அவரது தந்தை தஷ்ரத் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரி கூறினார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருவதாகவும் அவர் கூறினார்.