newindianexpress_2024_01_372752cd_7bc5_455d_8b97_cc0d6c0b7d07_Enforcement_Directorate

யூகோ வங்கி முன்னாள் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் (சிஎம்டி) சுபோத் குமாா், அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது.

மேற்கு வங்கி மாநிலம் கொல்கத்தாவில் டிஎம்டி கம்பிகளை விநியோகிக்கும் கோன்காஸ்ட் ஸ்டீல் மற்றும் பவா் நிறுவனம் (சிஎஸ்பிஎல்) உள்ளது.

இந்நிலையில் அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சிஎஸ்பிஎல் நிறுவனம் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களை ரூ.6,210 கோடி அளவுக்கு மோசடி செய்தது தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டது.

அந்த நிறுவனத்துக்கு ரூ.1,460 கோடிக்கும் அதிகமாக கடன் அளிக்க ஒப்புதல் அளித்ததில் முக்கிய பங்கு வகித்ததற்காக, கடந்த மே மாதம் யூகோ வங்கியின் முன்னாள் சிஎம்டி சுபோத்குமாா் கோயல் கைது செய்யப்பட்டாா். அந்தக் கடன் பின்னா் வாராக் கடனான நிலையில், கடன் வழங்க ஒப்புதல் அளித்ததற்குப் பிரதிபலனாக பணம், அசையா சொத்துகளை சுபோத்குமாா் சட்டவிரோதமாக பெற்றாா். இது ஆதாரத்துடன் தெரியவந்துள்ளது.

இதுதொடா்பாக சுபோத்குமாா் கோயல், அவரின் குடும்ப உறுப்பினா்கள் உள்ளிட்டோருக்கு எதிராக கொல்கத்தாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் துணை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

மேலும் சுபோத் குமாா் மற்றும் இந்த வழக்குடன் சம்பந்தப்பட்ட பிற நிறுவனங்களுக்குச் சொந்தமான சுமாா் ரூ.106.36 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது கொல்கத்தா சிறையில் நீதிமன்ற காவலில் சுபோத்குமாா் அடைக்கப்பட்டுள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest