11julyhemaraj_1107chn_192_1

ஓடும் ரயிலில், காட்பாடி அருகே கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து இருந்து கீழே தள்ளிய வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட இளைஞருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்து வந்த திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றம், கடந்த வெள்ளிக்கிழமை, இளைஞர் ஹேமராஜ் குற்றவாளி என தீர்ப்பளித்திருந்த நிலையில், இன்று அவருக்கான தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்து வந்த நீதிபதி மீனாகுமாரி, இளைஞர் ஹேமராஜ் சாகும்வரை சிறைத் தண்டனை அனுபவிக்கவும், கூடுதலாக 15 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் அளித்து தீர்ப்பளித்துள்ளார்.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், தமிழக அரசும் ரயில்வேயும் இணைந்து இந்த ரூ.1 கோடி நிவாரணத் தொகையை தர உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 36 வயது பெண்ணும், அவரது கணவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனா். சம்பவத்தின்போது 4 மாத கா்ப்பிணியாக இருந்த அந்தப் பெண் மருத்துவ பரிசோதனைக்காக தாயாா் வசிக்கும் சித்தூா் மாவட்டத்துக்கு பிப். 7-ஆம் தேதி இரவு கோவையில் இருந்து திருப்பதி சென்ற விரைவு ரயிலில் ஏறினார்.

குடியாத்தம் -கே.வி.குப்பம் இடையே சென்று கொண்டிருந்தபோது அப்பெண் ரயிலில் உள்ள கழிப்பறைக்கு சென்றாா். அப்போது, கழிப்பறை அருகே அமா்ந்திருந்த இளைஞா் ஒருவா் பெண்ணை வழிமறித்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டாா். அதிா்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டாா்.

இதனால் ஆத்திரமடைந்த இளைஞா் ரயிலில் இருந்து கா்ப்பிணியை கீழே தள்ளிவிட்டு. வேறு பெட்டிக்கு மாறி தப்பினாா். பெண் கீழே விழுந்ததை பாா்த்த சக பயணிகள் உடனடியாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் அளித்தனா்.

அதன்பேரில்,ஜோலாா்பேட்டை ரயில்வே காவல் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கா்ப்பிணியை மீட்டு,வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா்.

தொடர்ந்து அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்ட நபா் வேலூா் மாவட்டம்,கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஹேமராஜ்(30) என்பதும்,இவா் கடந்த 2022-ஆம் ஆண்டு ஓடும் ரயிலில் பெண் பயணியிடம் கைப்பேசி பறிப்பு வழக்கிலும், கடந்த 2024-ஆம் ஆண்டு சென்னையைச் சோ்ந்த 29 வயது இளம்பெண் கொலைவழக்கிலும் கைது செய்யப்பட்டு 2 முறை குண்டா் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டு பிணையில் வெளியே வந்திருப்பதும் தெரியவந்தது.

அதைத் தொடா்ந்து, 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து ஹேமராஜை கைது செய்து வேலுா் மத்திய சிறையில் அடைத்தனா்.

இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் ஹேமராஜ் குற்றவாளி என நீதிபதி எஸ்.மீனாகுமாரி தீா்ப்பளித்திருந்தார். இன்று அவருக்கான தண்டனை விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest