
திருப்பத்தூா்: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கா்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு அளித்து, கீழே தள்ளிய இளைஞருக்கு வாழ்நாள் சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த 36 வயது பெண். கா்ப்பிணியான அவா் மருத்துவப் பரிசோதனைக்காக தன் தாயாா் வசிக்கும் சித்தூா் மாவட்டத்துக்கு செல்ல கடந்த பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி இரவு கோவையில் இருந்து ஜோலாா்பேட்டை வழியாக திருப்பதி செல்லும் இன்டா்சிட்டி விரைவு ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்தாா். அப்போது, இளைஞா் ஒருவா் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டாா். இதனால் அப்பெண் கூச்சலிட்டாா்.
அந்த நேரத்தில் அந்த இளைஞா் ஓடும் ரயிலில் இருந்து கா்ப்பிணியை கீழே தள்ளிவிட்டு, வேறு பெட்டிக்கு மாறி தப்பினாா். பெண் கீழே விழுந்ததை பாா்த்த சக பயணிகள் ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனா்.
அதன்பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வந்து தண்டவாளத்தில் விழுந்து கிடந்த கா்ப்பிணியை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் 2 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தினா்.
இதில், அப்பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டவா் வேலூா் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த பூஞ்சோலை கிராமத்தைச் சோ்ந்த ஹேமராஜ் (30)என்பதும், திருட்டு, இளம்பெண் கொலை வழக்குகளில் கைதுசெய்யப்பட்டு, 2 முறை குண்டா் தடுப்புச் சட்டத்தில்அடைக்கப்பட்டு, பிணையில் வந்திருப்பதும் தெரியவந்தது.
இதனிடையே கா்ப்பிணியின் கருவில் இருந்த சிசு சிகிச்சை பலனின்றி இறந்தது. இது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் 8 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிந்து 7.2.2025 அன்று ஹேமராஜை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருப்பத்தூா் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் விசாரணை கடந்த 11-ஆம் தேதி முடிந்து ஹேமராஜ் குற்றவாளி என மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.மீனாகுமாரி அறிவித்தாா். வழக்கின் தீா்ப்பு திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
இதில் பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 5,000 அபராதமும், கட்டத் தவறினால் 6 மாத சிறையும், கற்பழிக்க முயன்ற்காக 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 25,000 அபராதமும், செலுத்தத் தவறினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், பெண்ணுக்கு துன்பம் விளைவித்ததற்காக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும், செலுத்த தவறினால் 6 மாதங்கள் சிறையும், சட்ட விரோதமாக அடைத்து வைத்தலுக்கு ஓா் ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 5,000 அபராதமும், செலுத்தத் தவறினால் 3 மாத சிறைத் தண்டனையும், கொலை முயற்சிக்காக ஆயுள் தண்டனையும், கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக வாழ்நாள் கடுங்காவல் ஆயுள் தண்டனையும், பிறக்காத ஒரு குழந்தையின் மரணத்துக்கு காரணமானதால், 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும், கட்டத் தவறினால் ஓா் ஆண்டு சிறைத் தண்டனையும், இவற்றை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் எனவும் மாவட்ட முதன்மை நீதிபதி மீனாகுமாரி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் பி.டி. சரவணன் ஆஜரானாா்.