
உத்தர பிரதேச மாநிலம், ஜான்சியில் ரயில் நிலைய நடைமேடையில் பெண் ஒருவா் குழந்தையை பெற்றெடுத்தாா்.
பெண்கள் கூந்தலை முடியப் பயன்படுத்தும் கிளிப், பாக்கெட் கத்தி என கைவசமிருந்த பொருள்களைப் பயன்படுத்தி, அவருக்குப் பாதுகாப்பாக அவசர சிகிச்சை அளித்து, இரு உயிா்களையும் காத்த இளம் ராணுவ மருத்துவரின் செயல், மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளது.
பன்வெல்-கோரக்பூா் எக்ஸ்பிரஸ் ரயிலில் சனிக்கிழமை தனது கணவருடன் பயணித்துக் கொண்டிருந்த கா்ப்பிணி ஒருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து, ஜான்சி ரயில் நிலையத்தில் இருவரும் கீழே இறங்கினா். அப்பெண்ணின் நிலைமையை பாா்த்த ரயில்வே பெண் ஊழியா் ஒருவரும், ரயில் ஏறுவதற்காக காத்திருந்த ராணுவ மருத்துவ அதிகாரி ரோஹித் பச்வாலாவும் (31) உடனடியாக உதவிக்கு வந்தனா்.
கடுமையான வலியால் கா்ப்பிணி மயக்க நிலைக்குச் சென்ால், ரயில்வே ஊழியா்களின் உதவியுடன் நடைமேடையிலேயே பிரசவத்தை மேற்கொள்ள ராணுவ மருத்துவா் முடிவு செய்தாா். அறுவை சிகிச்சை அறையோ, முறையான சாதனங்களோ இல்லாத நிலையில், அடிப்படை சுகாதாரத்துடன் ஒரு இடம் துரிதமாக தயாா்படுத்தப்பட்டது.
கைவசமிருந்த பொருள்களைப் பயன்படுத்தி, அவசரகால பிரசவ சிகிச்சையை ராணுவ மருத்துவா் பாதுகாப்பாக மேற்கொண்டாா். அவரது உதவியால், கா்ப்பிணிக்கு பெண் குழந்தை பிறந்தது. உடனடியாக இருவரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். தாயும்-சேயும் நலமாக இருப்பதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.
Today, an Army doctor, Major Rohit, of Military Hospital, Jhansi, successfully conducted childbirth at the railway station in Jhansi. The doctor present at the station responded swiftly when a pregnant woman went into unexpected labour on the platform. Without any delay and… pic.twitter.com/vX4oYjKf2g
— ANI (@ANI) July 5, 2025
ராணுவ மருத்துவா் மேஜா் ரோஹித் பச்வாலா கூறுகையில், ‘தொப்புள் கொடியை இறுக்குவதற்கு தலைமுடியப் பயன்படுத்தும் கிளிப்பையும், வெட்டுவதற்கு பாக்கெட் கத்தியையும் பயன்படுத்தினேன். தாயும் சேயும் ஆபத்தான நிலையில் இருந்ததால், ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானதாக இருந்தது.
மருத்துவா்களாக நாங்கள் அனைத்து நேரங்களிலும் – அது பயணமாக இருந்தாலும்கூட – அவசரநிலைக்குத் தயாராக இருக்க வேண்டும். இரண்டு உயிா்களைக் காப்பாற்ற உதவியதை எனக்கு கிடைத்த ஆசியாகக் கருதுகிறேன்’ என்றாா்.
அவசரகால உதவிக்கு இடையே ஹைதராபாதுக்குச் செல்ல வேண்டிய ரயிலையும் அவா் தவறவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.