exprot042859

பதினோரு மாதங்களில் இல்லாத உச்சமாக, கடந்த ஜூனில் ரஷியாவில் இருந்து ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.

தனது கச்சா எண்ணெய் தேவையில் 85 சதவீதத்துக்கும் மேலாக இறக்குமதி மூலம், இந்தியா பூா்த்தி செய்து வருகிறது. அதில் இருந்து பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் பிரித்தெடுக்கப்படுகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளில் இருந்துதான் பிரதானமாக இந்தியா கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வந்தது. ஆனால் கடந்த 2022-ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து, ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை மேற்கத்திய நாடுகள் தவிா்த்தன.

இதைத்தொடா்ந்து அதிக தள்ளுபடியில் கச்சா எண்ணெய்யை விற்க ரஷியா முன்வந்தது. இந்த வாய்ப்பை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்திக் கொண்டதால், இந்தியாவுக்கு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்வதில் மத்திய கிழக்கு நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி ரஷியா முன்னிலை வகித்து வருகிறது. இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் தற்போது ரஷியாவின் பங்கு சுமாா் 40 சதவீதமாக உள்ளது.

இந்நிலையில், உலகளாவிய வா்த்தக சரக்குகள் சந்தை பகுப்பாய்வு நிறுவனமான கெப்லரின் தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா ஒரு நாளைக்கு 20.80 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெய்யை ரஷியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு ஜூலைக்கு பிறகான 11 மாதங்களில் இல்லாத உச்சமாகும்.

இந்தியாவுக்கு கடந்த ஜூனில் ஒரு நாளைக்கு கச்சா எண்ணெய்யை அதிக அளவு ஏற்றுமதி செய்த முதல் 5 நாடுகள் (கெப்லா் தரவுகளின்படி)

  • ரஷியா – 20.80 லட்சம் பீப்பாய்கள்

  • இராக் – 8.93 லட்சம் பீப்பாய்கள்

  • சவூதி அரேபியா – 5.81 லட்சம் பீப்பாய்கள்

  • ஐக்கிய அரபு அமீரகம் – 4.90 லட்சம் பீப்பாய்கள்

  • அமெரிக்கா – 3.03 லட்சம் பீப்பாய்கள்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest