
ரஷிய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ரஷியாவிலிருந்து கச்சா எண்ணெயை இந்தியா கொள்முதல் செய்வதைத் தொடர்ந்து, இந்திய இறக்குமதி பொருள்கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகித வரிவிதிப்பை அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்காக மாஸ்கோவிற்கு சென்றுள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷிய அதிபர் விளாதிமிர் புதினை கிரெம்ளினில் நேற்று சந்தித்திருந்தார்.
இந்த நிலையில், ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடினார். அப்போது, உக்ரைனில் நடந்து வரும் மோதல் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் விவாதித்தனர்.
இந்த உரையாடலின் போது, இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 23-வது வருடாந்திர இருதரப்பு உச்சிமாநாட்டிற்காக ரஷிய அதிபர் புதினை இந்தியாவுக்கு வருமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார்.
இந்த பயணம் இறுதி செய்யப்பட்டவுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் எரிசக்தி தேவைக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், “எனது நண்பரும் அதிபருமான புதினுடன் மிகவும் சிறப்பான, விரிவான உரையாடலை நடத்தினேன். உக்ரைன் தொடர்பான அண்மைக்கால முன்னேற்றங்களைப் பகிர்ந்து கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தேன்.
எங்கள் இருதரப்பிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் பேசினோம். இந்த ஆண்டு இறுதியில் இந்தியா வரவிருக்கும் அதிபர் புதினை வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.