ajays-2

இந்தியாவின் எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்வதில் ரஷ்யாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் கணிசமான பங்கு வகிக்கிறது.

ரஷ்யாவுடன் தொடர்ந்து வர்த்தகம் செய்தால் இந்தியா, பிரேசில், சீனா ஆகிய நாடுகளின் மீது 100% இரண்டாம் நிலை கட்டணங்கள் விதிக்கப்படும் என நேட்டோ பொதுச்செயலாளர் மார்க் ரூட்டே எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அவரது கருத்துக்கு நேருக்கு நேராக எதிர்வினையாற்றியுள்ளது இந்திய வெளியுறவு அமைச்சகம்.

நேட்டோவின் எச்சரிக்கை குறித்து வெளியுறவுத்துறை செயலர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “இது குறித்த அறிக்கைகளை பார்த்தோம், என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். நமது மக்களின் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு புரிந்துகொள்ளக் கூடிய வகையில் நாம் முன்னுரிமை அளித்து வருகிறோம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

ரந்தீர் ஜெய்ஸ்வால்

இந்த விஷயத்தில் சந்தையின் நிலைமை மற்றும் மாறிவரும் உலக சூழல்களுக்கு ஏற்ப நாம் முடிவுகளை எடுக்கிறோம். இதில் என்ன இரட்டை நிலைப்பாடுகள் இருந்தாலும் நாங்கள் அதுகுறித்து எச்சரிக்கையாக இருக்கிறோம்” எனப் பேசியுள்ளார்.

மார்க் ரூட்டே பேசியது என்ன?

“இந்த மூன்று நாடுகளுக்கும் நான் சொல்வது என்னவென்றால் நீங்கள் பெய்ஜிங் அல்லது டெல்லியில் வசிப்பவராக இருந்தால், பிரேசில் அதிபராக இருந்தால் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தவவேண்டியது மிக முக்கியமான ஒன்று. ஏனென்றால், இது (இரண்டாம் நிலை கட்டணங்கள்) உங்களையும் கடுமையாக பாதிக்கக்கூடும்

எனவே தயவுசெய்து விளாடிமிர் புதினுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்து, அமைதிப் பேச்சுவார்த்தைகளில் அவர் தீவிரமாக ஈடுபட வேண்டும் எனச் சொல்லுங்கள், இல்லையெனில், இது பிரேசில், இந்தியா மற்றும் சீனா மீது பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்” என எச்சரிக்கை விடுத்தர் மார்க் ரூட்டே.

Trump, Rutte
Trump, Rutte

ட்ரம்ப்பின் மிரட்டல்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இன்னும் 50 நாட்களுக்குள் உக்ரைன்-ரஷ்யா போரில் உடன்படிக்கை ஏற்பட வேண்டுமென காலக்கெடு விதித்திருக்கிறார். அதற்காக ரஷ்யா மீது கடுமையான தடைகளை விதிக்கும் அதே சூழலில் உக்ரைனுக்கு அதிகப்படியான ஆயுதங்களை வழங்கியிருக்கிறார்.

முன்னதாக புதினுடன் நல்ல உறவு இருப்பதாகக் கூறி வந்த ட்ரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைக் கூட விமர்சித்திருக்கிறார். ஆனால் புதினுடன் பலகட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகும் ரஷ்யாவின் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை என்பதால் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தக தொடர்புகளைத் துண்டிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இல்லை என்றால் இரண்டாம் நிலை கட்டணங்கள் அல்லது தடைகள் விதிக்கப்படலாம் என மிரட்டலும் விடுத்துள்ளார்.

NATO-வின் இரட்டை நிலைப்பாடு!

மார்க் ரூட்டே பேச்சுக்கு பல தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்துள்ளன. நேட்டோ பொதுச் செயலாளர் அவரது புவியியல் எல்லையை உணராமல் பேசுவதாகக் குற்றம்சாட்டிய முன்னாள் தூதர் கன்வால் சிபல், “துருக்கி அதிக அளவில் ரஷ்ய எண்ணெயை இறக்குமதி செய்கிறது. நேட்டோ உறுப்பினர் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்க நேட்டோ செயலாளர் ஜெனரல் அழுத்தம் கொடுப்பாரா? இது குறித்து வசதியாக மௌனம் காத்துவருகிறார்.

ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் அதன் எண்ணெயில் 7% ரஷ்யாவிலிருந்து இறக்குமதி செய்கிறது. ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவும் தடை செய்யப்படுமா. அவர்களும் நேட்டோ உறுப்பினர்கள். ரூட்டே இது குறித்தும் மௌனம் காக்கிறார்.” என விமர்சித்துள்ளார்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest