
ரஷ்யாவில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்து வருவதையடுத்து, சில மாகாணங்களில் கர்ப்பம் தரிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு குழந்தைப் பேறுக்காகவும், வளர்ப்புச் செலவுக்காகவும் அரசு சார்பில் 1,00,000 ரூபிள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி தளங்கள் தெரிவிக்கின்றன. இந்திய மதிப்பில் சுமார் ஒரு லட்சத்து ஒன்பதாயிரம் ரூபாய்.
ரஷ்யாவில் மக்கள் தொகையைப் பெருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் 10 மாகாணங்களில் செயல்படுத்தப்படவிருக்கிறது.
குழந்தைப் பிறப்பை அதிகரிப்பதற்காக கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் மார்ச் 2025ல் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் வயது வந்த பெண்களுக்கு மட்டுமே இது செயல்படுத்தப்பட்டது.

2023 ஆம் ஆண்டில் ரஷ்யாவின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு 1.41 பிறப்புகள் என்ற அளவிலேதான் இருந்திருக்கிறது. மக்கள் தொகையைத் தக்கவைக்க ஒரு பெண்ணுக்கு 2.05 என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதை சாத்தியப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இளம் மாணவிகள் கருவுறுவதை ஆதரிக்கும் வகையிலான இந்த திட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ரஷ்ய பொது கருத்து ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில், 43% ரஷ்யர்கள் இந்தக் கொள்கையை ஆதரிப்பதாகவும், 40% பேர் எதிர்ப்பதாகவும் தெரியவந்துள்ளது என பிடிஐ செய்திதளம் கூறுகிறது.
உக்ரைன் போர் பின்னணி!
ரஷ்ய அதிபர் புதின் குழந்தைப் பேற்றை அதிகரிப்பதை தேசிய முன்னுரிமையாக அறிவித்துள்ளார். ரஷ்யாவின் பிராந்தியத்தை விரிவடையச் செய்யவும், ராணுவ பலத்தை அதிகரிக்கவும் அளிக்கும் முக்கியத்துவத்தை இந்த விஷயத்திலும் அளித்து வருகிறார்.
உக்ரைன் உடனான போர் மக்கள் தொகைக்கு பெரும் சவாலாக எழுந்துள்ளது. ரஷ்யா 2022 பிப்ரவரி மாதம் முதல் 10,00,000 வீரர்களை இழந்திருப்பதாக உக்ரைன் தெரிவித்தது. ஆனால் குறைந்த பட்சம் சுமார் 2,50,000 வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

அதுமட்டுமல்லாமல் கட்டாய ராணுவ ஆட்சேர்ப்புக்கு அஞ்சி ஆயிரக்கணக்கான படித்த இளைஞர்கள் நாட்டை விட்டு தப்பியுள்ளனர்.
வலுக்கும் தார்மீக எதிர்ப்பு
பள்ளி மாணவிகள் குழந்தைப் பேற்றுக்கு ஊக்கத்தொகை வழங்குவது ரஷ்ய அரசின்மீது தார்மீக கேள்விகளை எழுப்பியுள்ளது. பலரும் இது, 10 குழந்தை பெற்ற பெண்களுக்கு பதக்கம் வழங்குதல், குழந்தைகள் இல்லாமல் வாழ்வதற்கான பிரசாரத்தை தடை செய்தல், தனியார் மருத்துவமனையில் கருக்கலைப்புக்கு பல்வேறு நிபந்தனைகள் விதித்தல் என ஸ்டாலின் காலத்து நடவடிக்கைகளை நினைவுபடுத்துவதாக விமர்சித்துள்ளனர்.
ரஷ்யாவில் தற்போது படிப்புக்காகவும், வேலைக்காகவும் குழந்தைப்பேற்றை தாமதிக்கும் அல்லது தவிர்க்கும் பெண்கள் பொதுவெளியில் விமர்சனத்துக்குள்ளாகி வருகின்றனர்.
அதிக குழந்தைகள் பெற வற்புறுத்தும் தேசியவாதம்!
ரஷ்யா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் குழந்தை பேற்றை ஊக்குவிக்கும் போக்கைக் காணமுடிகிறது. 2050ம் ஆண்டுக்குள் உலகின் 75% நாடுகள் மக்கள் தொகை நெருக்கடியைச் சந்திக்கும் எனக் கூறப்படுகிறது.
இதனால் பெரும்பாலான நாடுகள், குழந்தை பிறப்பை ஊக்குவிக்க தேசியவாத பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றன.
அமெரிக்காவில் டொனால்ட் ட்ரம்ப் ஒரு குழந்தைப் பெற்றெடுக்கும் பெண்ணுக்கு 5,000 டாலர்கள் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். பெரிய குடும்பங்கள் உருவாவதை ஊக்குவிக்கும் இந்த முயற்சியை எலான் மஸ்க் போன்றோர் ஆதரித்துள்ளனர்.

ஹங்கேரியில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு வரிச் சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படுகின்றன. போலந்தில் இரண்டாவது குழந்தைப் பெறும் குடும்பத்துக்கு 500 ஸ்லோட்டி (அந்த நாட்டின் நாணயம்) வழங்கப்படுகிறது.
ஆனால் இந்த ஊக்கத் தொகைகள் பெருமளவில் பலனளிக்கவில்லை. வேலைகளில் நன்றாக சம்பாதிக்கும் பெண்கள், மற்றொரு குழந்தை கரியரில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதனால் அரசின் ஊக்கத் தொகைகளில் ஆர்வம் காட்டவில்லை.
ஸ்பெயின் மக்கள் தொகை நெருக்கடியை வேறுவிதமாக கையாண்டு வருகிறது. லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து குடியேறுபவர்களுக்கான செயல்முறைகளை எளிதாக்கியுள்ளது.
உலக அரசுகள் குழந்தைப் பிறப்பை அதிகரிக்க பொருளாதாரத்தை விட அவர்களின் சித்தாந்த விருப்பமே முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. அரசுகள் அவர்களது விரும்பத்தக்க இனம், மதம் மற்றும் சமூக-பொருளாதார அந்தஸ்தில் இருப்பவர்களே அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள ஊக்கப்படுத்துகின்றன. இதனால்தான் தேசிய இனவாத பிரசாரம் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் குடியேறிகள் வெளியேற்றப்படுகின்றனர். ஆனால் வெள்ளையின அமெரிக்கர்கள் அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.
ஹங்கேரியில் தன்பாலின ஈர்ப்பாளர்கள், அதிக சம்பளம் பெறுபவர்கள் அதிக குழந்தைகள் பெறுவதை அரசு ஆதரிக்கவில்லை. அதேவேளையில் ஸ்பெயின் ஆப்பிரிக்க-ஐரோப்பியர்களை விட ஸ்பானிஷ் பேசும் கத்தோலிக்கர்கள் குடியேறுவதற்கே முன்னுரிமை கொடுக்கிறது.
மிக முக்கியமாக இந்த பிரசாரங்கள் பெண்களின் குழந்தைப் பேறு சுதந்திரத்தில் தலையிடுவதாலேயே வெற்றிகரமானவையாக இல்லாமல் இருக்கின்றன.