rahul-ganthi

வாக்குத் திருட்டு விவகாரத்தில் ராகுல் காந்தியின் மூளை திருடுபோய்விட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருந்த ராகுல் காந்தி இன்று தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாகவும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

இதனைத் தொடர்ந்து, பிகார் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர், மகாராஷ்டிரத்தை போன்று பிகாரிலும் வாக்குத் திருட்டு நடத்த முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ராகுலின் இந்தக் கருத்தை மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மற்றும் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இருவரும் கடுமையாக நிராகரித்துள்ளனர்.

கோவாவில் நடைபெறும் நிகழ்ச்சிக்காக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் பானாஜி சென்றுள்ளார். அங்கு அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், “ராகுலின் கருத்துகள் அடிப்படை ஆதாரமற்றவை. இது அவரின் தனிப்பட்ட தாக்குதல்கள். அவர் அவரின் மூளையை பரிசோதிக்க வேண்டும் என நினைக்கிறேன்.

ராகுலின் மூளை திருடுபோய் இருக்கலாம் அல்லது அவரின் மூளையில் இருந்து சிப் (chip) ஏதாவது காணாமல் போயிருக்கலாம். அதனால்தான், இதுபோன்ற கருத்துகளை அவர் கூறிவருகிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறும்போது, “ராகுல் காந்தி தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பி வருகிறார். ஆனால், அவரை மக்கள் நம்பப் போவது இல்லை” எனத் தெரிவித்தார்.

‘His brain has been stolen’: Maharashtra CM Fadnavis hits out at Rahul Gandhi over voter fraud claims

இதையும் படிக்க : வாக்குத் திருட்டு! சான்றுகளுடன் ராகுல் சரமாரி குற்றச்சாட்டு!

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest