
லக்னௌ: ராணுவ வீரர்களைப் புண்படுத்தும் விதத்தில் அவதூறு கருத்து தெரிவித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில் மக்களவை எதிர்ர்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவை தேர்தலுக்கு முன், 2022-இல் பாரத் ஜோடோ யாத்திரையில் நடைப்பயணம் மேற்கோண்ட ராகுல் காந்தி, அப்போது இந்திய ராணுவ வீரர்களைப் பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது புகாரளிக்கப்பட்டது.
இந்த வழக்கில் ஆஜராக செவ்வாய்க்கிழமை(ஜூலை 15) ராகுல் காந்தி லக்னௌவிலுள்ள எம்.பி. எம்.எல்.ஏ.வுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கின் விசாரணையில், அவரை நிபந்தனை ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே, தன் மீதான அவதூறு வழக்குகள் பற்றி செய்தியாளர்களுடன் கடந்த காலங்களில் பேசிய ராகுல் காந்தி, ‘பாஜக தரப்பிலிருந்து என் மீது 30 – 32 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. அவையனைத்தும் எனக்கு பதக்கங்கள் போன்றவையே’ என்று குறிப்பிட்டிருந்தார்.