
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தனது சொந்த தொகுதியான ரேபரேலிக்கு வருகை தருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உத்தரப் பிரதேச மாநில அமைச்சர் (தனிப்பொறுப்பு) தினேஷ் பிரதாப் சிங், பாஜக-வினருடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் தனது வெற்றிக்காக நன்றி கூற கடந்த ஏப்ரல் 29ம் தேதி ரேபரேலி சென்ற பிறகு அவரது முதல் விசிட் இதுவாகும். தொகுதியில் இரண்டு நாட்கள் பணிகளை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
VIDEO | Raebareli, Uttar Pradesh: BJP workers led by state minister Dinesh Pratap Singh try to block Congress MP Rahul Gandhi's convoy. Rahul Gandhi is on a two-day visit to his Lok Sabha constituency Raebareli.
Dinesh Pratap Singh (@RBLDineshSingh) says, "Rahul Gandhi should… pic.twitter.com/Ddg1obSuoC
— Press Trust of India (@PTI_News) September 10, 2025
இதற்காக லக்னோ விமான நிலையம் வந்திறங்கிய ராகுல் காந்தி, அங்கிருந்து காரில் பயணம் செய்தார்.
பாஜக-வினரின் போராட்டம் ராகுல் காந்தியின் வாகனத்துக்கு ஒரு கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் நடைபெற்றதனால், அவரது பயணம் தடைபட்டது. சுமார் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் உ.பி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை.
செல்வப்பெருந்தகை கண்டனம்:
இன்று இந்திய நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் தனது சொந்த நாடாளுமன்றத் தொகுதியான ரேபரேலிக்குச் செல்லும் வழியில் பாஜக குண்டர்கள் திட்டமிட்டு அவரது பாதுகாப்பு வாகனங்களைத் தடுத்து நிறுத்தியிருப்பது, அரசியல் அராஜகமும் பாசிசக் கொடூரமும் ஆகும்.

இது சாதாரண தடையோ, அரசியல் சச்சரவோ அல்ல — மக்களின் நம்பிக்கையை நசுக்கி, எதிர்க்கட்சியினரை அச்சுறுத்தும் முயற்சியாகும். இந்த அராஜகத்தில் உத்தரப் பிரதேச மாநில அமைச்சரான தினேஷ் பிரதாப் சிங் நேரடியாக பங்கேற்றிருப்பதும், யோகி ஆதித்தநாத் தலைமையிலான பாசிச பாஜக கும்பல் ஆட்சி இந்தச் சதியின் பின்னணியில் இருப்பது மறுக்க முடியாத உண்மை.
ராகுல் காந்தி அவர்களின் எழுச்சியை தடுக்க முடியாமல், பாஜக குண்டர்களின் அடக்குமுறை மற்றும் அரசியல் பயங்கரவாதத்தை பயன்படுத்துகிறது.
இந்தப் பாசிச செயல்களில் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் மொத்தமாக ஈடுபட்டு, இந்திய ஜனநாயகத்தை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சி செய்கின்றனர்.
நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் பாதுகாப்பு வாகனத்தையே தடுக்கும் நிலை உருவாக்குவது, நாட்டின் ஜனநாயக மாண்பை சிதைக்கும் செயல் என்பதை வெளிப்படுத்துகிறது.
மக்கள் இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இதையெல்லாம் மறக்க மாட்டார்கள். தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நான் இந்தச் செயலை வன்மையாக் கண்டிப்பது மட்டுமல்ல, மக்களிடம் நேரடியாகக் கூறுகிறேன், இது எச்சரிக்கை மணி அல்ல, இது போராட்ட மணி.
ஒவ்வொரு தெருவும், ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு கிராமமும் பாஜகவின் பாசிசத்துக்கு எதிராக புரட்சியின் மேடையாக மாறும். மக்களின் எழுச்சியால் பாஜக-வின் அடக்குமுறை சிதறி நொறுங்கி, ஜனநாயகம் மீண்டும் உயிர்த்தெழும்.
மோடி, ஆர்எஸ்எஸ், யோகி ஆதித்தநாத் — நீங்கள் ஜனநாயகத்தை அடக்க முயற்சி செய்தாலும், மக்களின் தீர்ப்பு உங்களை வீழ்த்தும். இந்திய ஜனநாயகம் எரியும் நெருப்பாக எழுந்து, உங்களின் பாசிசக் கொடூரங்களை முற்றாக அழித்துவிடும்.