
மகாராஷ்டிரம் உள்ளிட்ட பேரவைத் தேர்தல்களில் வாக்குத் திருட்டு குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி 5 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மக்களவை தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருந்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி நேற்று தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். மேலும், செய்தியாளர்கள் சந்திப்பில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்களையும் வெளியிட்டார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடைபெற்றதாகவும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாகவும் ராகுல் காந்தி அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இந்த நிலையில், இந்த விவகாரத்தைக் கண்டித்து பெங்களூருவில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ராகுல் காந்தி, கர்நாடகத்தின் ஃப்ரீடம் பார்க்கில் காங்கிரஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றினார். இந்தப் பேரணியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது, மஹாதேவபுரா தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் திருட்டுப் போனது குறித்து இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் கேள்வியெழுப்பினார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் ராகுல் காந்தி எழுப்பியள்ள கேள்விகள்:
-
டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட இந்தியத் தேர்தல் ஆணையம் மறுப்பது ஏன்?
-
விடியோ ஆதாரங்களை அழிப்பது ஏன்?
-
வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடியை இந்தியத் தேர்தல் ஆணையம் செய்வது ஏன்?
-
எங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், எதிர்க்கட்சிகளை மிரட்டுவது ஏன்?
-
தேர்தல் ஆணையம் பாஜகவின் ஏஜண்டைப் போல செயல்படுவது ஏன்?
என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் காந்தி 5 கேள்விகளை எழுப்பியுள்ளார்.