
ராஜஸ்தானில் உள்ள அரசுப் பள்ளியின் வாயிலில் கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் ஆறு வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜலாவரில் அரசுப் பள்ளி கட்டடத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஏழு பேர் கொல்லப்பட்ட மூன்று நாள்களில், ராம்கர் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் இந்த சம்பவம் நடைபெற்றது. இந்த சம்பவத்தில் 6 வயது குழந்தை உயிரிழந்துள்ளது.
பள்ளியை விட்டு வெளியேறும்போது கான்கிரீட் பெயர்ந்து விழுந்ததில் 6 வயது சிறுவன் உயிரிழந்தான். உயிரிழந்த சிறுவன் அர்பாஸ் கான் என அடையாளம் காணப்பட்டது. மேலும் காயமடைந்த ஆசிரியர் அசோக் குமார் சோனி மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து சிறுவனின் உடலுடன் பெற்றோர்கள் பள்ளிக்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். குடும்ப உறுப்பினர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
ஜெய்சால்மரில் பள்ளி வாயில் இடிந்து விழுந்ததில் அப்பாவி சிறுவன் இறந்தது மிகவும் வருத்தமளிக்கிறது.
இந்த மழைக் காலத்தில் இதுபோன்ற சம்பவங்களில் வேறு எந்த மாணவரும் உயிரிழக்காமல் தவிர்க்க முதல்வர் பஜன்லால் சர்மா உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் அசோக் கெலாட் கூறினார்,
ஜலாவர் துயரத்திற்குப் பிறகு, மேலும் ஒரு மாணவர் இறந்தது மாநில அரசுக்குக் கவலை அளிக்கும் விஷயமாக இருக்க வேண்டும் என்று அவர் பதிவில் கூறினார்.