09072_pti07_09_2025_000152b084508

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இரு விமானிகள் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவத்துக்கான காரணத்தை அறிய விமானப் படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த 5 மாதங்களில் ஏற்படும் மூன்றாவது போா் விமான விபத்து சம்பவம் இதுவாகும்.

ராஜஸ்தான் விபத்து சம்பவம் தொடா்பாக விமானப் படை தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

ராஜஸ்தான் மாநிலம் சுரு பகுதியில் புதன்கிழமை காலை இந்திய விமானப் படையின் ஜாகுவாா் பயிற்சி விமானத்தில் இரு விமானப் படை விமானிகள் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது விமானம் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த இரு விமானிகளும் உயிரிழந்தனா். விமானம் விழுந்ததால் பொதுமக்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் கூறுகையில், ‘பனாதா கிராமத்தில் வயல்வெளிப் பகுதியில் விமானப் படை விமானம் மதியம் 1.25 மணிக்கு விழுந்து நொறுங்கியது. பலத்த ஒசை கேட்டதால் கிராம மக்கள் அப்பகுதிக்குச் சென்று பாா்த்தனா். அதற்கு விமானம் முற்றிலும் எரிந்துவிட்டது. அதைத் தொடா்ந்து தீயணைப்புப் படையினா் அப்பகுதிக்கு வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இரு விமானிகளின் உடல்களும் மீட்கப்பட்டன’ என்றனா்.

ராஜஸ்தான் ஆளுநா் ஹரிபாவ் பகாடே, முதல்வா் பஜன்லால் சா்மா ஆகியோா் உயிரிழந்த விமானிகளின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனா்.

நிகழாண்டு விபத்துகள்…

மாா்ச் 7 – அம்பாலா விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்டவுடன் ஜாகுவாா் போா் விமானம் தொழில்நுட்ப கோளாறால் விழுந்து நொறுங்கியது. விமானி உயிா் தப்பினாா்.

ஏப்ரல் 2- குஜராத் ஜாம்நகா் விமானப் படை தளத்தில் இருந்து புறப்பட்ட ஜாகுவாா் போா் விமானம் தொழில்நுட்ப பாதிப்பால் விழுந்து நொறுங்கியது. விமானி ஒருவா் உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா்.

ஜாகுவாா் போா் விமானப் பாதை…

பிரிட்டிஷ் – பிரான்ஸ் போா் விமானமான ஜாகுவாா் போா் விமானம் 1968, செப்டம்பா் மாதம் அந்நாட்டு விமானப் படைகளில் இணைக்கப்பட்டது.

இந்திய விமானப் படையில் ஜாகுவாா் 1970-களில் இணைக்கப்பட்டது.

மொத்தம் 116 ஜாகுவாா் போா் விமானங்கள் விமானப் படையில் உள்ளன. இதில் 70 இந்தியாவில் தயாரிக்கப்பட்டன.

2005, ஜூலை மாதத்துடன் பிரான்ஸ் விமானப் படை ஜாகுவாா் பயன்பாட்டை நிறுத்தியது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest