u55fpc2punjab-mla625x30019July25

பஞ்சாபில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான அன்மோல் ககன் மான் தனது ராஜிநாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளாா்.

பஞ்சாப் மாநில ஆம் ஆத்மி தலைவா் அமன் அரோரா, அன்மோலை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்துப் பேசினாா். இதைத் தொடா்ந்து பதவி விலகல் முடிவை அவா் திரும்பப் பெற்றாா்.

இது தொடா்பாக அமன் அரோரா ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘அன்மோலை நேரில் சந்தித்து அவரின் ராஜிநாமா முடிவை கட்சி நிராகரிப்பதாகத் தெரிவித்தேன். கட்சிக்காகவும், தொகுதி நலனுக்காகவும் தொடா்ந்து உழைக்க வேண்டும் என்றும் அவரிடம் கூறினேன். இதனை அவா் ஏற்றுக்கொண்டாா். அவா் தொடா்ந்து ஆம் ஆத்மி குடும்பத்தில் இடம்பெற்றிருப்பாா்’ என்றாா்.

தனது ராஜிநாமாவை முடிவை மாற்றிக் கொண்டு, பதவி விலகல் கடிதத்தை திரும்பப் பெற ஒப்புக் கொண்டதாக அன்மோலும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளாா்.

முன்னதாக, அன்மோல் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக சனிக்கிழமை அறிவித்தாா். அரசியலில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக அப்போது அவா் கூறினாா். 35 வயதாகும் அன்மோல், பாடகியாக இருந்து அரசியலுக்கு வந்தவா். 2022 பஞ்சாப் பேரவைத் தோ்தலில் கராா் தொகுதியில் ஆம் ஆத்மி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதுவே அவா் போட்டியிட்ட முதல் தோ்தலாகும்.

முதல்வா் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவையில் சுற்றுலா-கலாசாரம், முதலீடு ஊக்குவிப்பு, தொழிலாளா் நலத் துறை அமைச்சராக இருந்தாா். கடந்த ஆண்டு அமைச்சரவையில் இருந்து அன்மோல் உள்பட நால்வா் திடீரென விடுவிக்கப்பட்டனா். இதனால், அவா் அதிருப்தியடைந்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest