twitter-logo-X-TNie-edi

ராய்ட்டர்ஸ் உள்பட 2,355 கணக்குகளை முடக்க இந்திய அரசு உத்தரவிட்டதாக எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தெரிவித்துள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் தளக் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டதற்கும் அரசுக்கும் தொடர்பில்லை என மத்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சமீபத்தில் தெரிவித்திருந்த நிலையில், எக்ஸ் நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது.

இது குறித்து எக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய அரசாங்க விவகாரக் குழு தங்கள் அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

”தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 69ஏ-வின் படி, இந்தியாவில் 2,355 கணக்குகளை முடக்குமாறு 2025 ஜூலை 3ஆம் தேதி எக்ஸ் நிறுவனத்துக்கு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இதில் சர்வதேச செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸ், ராய்ட்டர்ஸ் வேர்ல்ட் ஆகியவையும் அடக்கம்.

எந்தவொரு நியாயமான கோரிக்கையையும் வழங்காமல், ஒரு மணி நேரத்திற்குள் அந்தக் கணக்குகளை முடக்குமாறு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை கோரியது. மறு உத்தரவு வரும் வரை அவை முடக்கப்பட்டிருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டது.

எக்ஸ் கணக்கு முடக்கம் குறித்து பொதுவெளியில் தகவல் கசிந்ததும், ராய்ட்டர்ஸ், ராய்ட்டர்ஸ் வேர்ல்ட் ஆகிய இரு எக்ஸ் கணக்குகளும் முடக்கத்தில் இருந்து விடுவிக்கப்பட்டன.

எக்ஸ் கணக்குகளை முடக்கும் உத்தரவால் இந்தியாவில் பத்திரிகை தணிக்கை ஏற்பட்டுள்ளதற்கு வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம். எக்ஸ் நிறுவனம் அனைத்து சட்டப்பூர்வ விருப்பங்களையும் ஆராய்ந்து வருகிறது.

இந்த நிர்வாக உத்தரவுகளுக்கு எதிராக சட்ட சவால்களைக் சந்திக்கும் திறனில் எக்ஸ் நிறுவனம் இந்திய சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பயனர்கள் நீதிமன்றங்கள் மூலம் சட்டப்பூர்வ தீர்வுகளைத் தொடருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்” எனப் பதிவிடப்பட்டுள்ளது.

எனினும் எக்ஸ் நிறுவனத்தின் இந்தக் கருத்துக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை மறுப்பு தெரிவித்துள்ளது.

இது குறித்து செய்தித்தொடர்பாளர் தரப்பில் கூறியதாவது,

”ராய்ட்டர்ஸ், ராய்ட்டர்ஸ் வேர்ல்ட் போன்ற சர்வதேச செய்தி நிறுவனங்களின் எக்ஸ் தளக் கணக்குகளை முடக்க வேண்டிய எந்தவொரு நோக்கமும் அரசுக்கு இல்லை. 2025 ஜூலை 3ஆம் தேதி, எக்ஸ் நிறுவனத்துக்கு எந்தவொரு உத்தரவுகளையும் புதிதாக அரசு பிறப்பிக்கவில்லை. இந்தியாவில் ராய்ட்டர்ஸ், ராய்ட்டர்ஸ் வேர்ல்ட் முடக்கப்பட்ட தருணத்தில், அவற்றை விடுவிக்குமாறு உடனடியாக எக்ஸ் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதியது” எனக் குறிப்பிட்டார்.

மேலும், ”இந்த விவகாரத்தில் ஜூலை 5ஆம் தேதி இரவு வரை எக்ஸ் நிறுவனத்துடன் அரசு தொடர்பில் இருந்தது. எக்ஸ் நிறுவனம் தேவையில்லாத தொழில்நுட்பச் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளது. தொடர் பல மணிநேர கண்காணிப்புகளுக்குப் பிறகு, ஜூலை 6ஆம் தேதிதான் எக்ஸ் நிறுவனம் ராய்ட்டர்ஸ், ராய்ட்டர்ஸ் வேர்ல்ட் கணக்குகளை விடுவித்தது. கிட்டத்தட்ட 21 மணிநேரம் தேவைப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க | ஜிஎஸ்டியால் வரி செலுத்துவோர் விகிதம் 145% அதிகரிப்பு!

X says Centre ordered it to block 2,355 accounts, including Reuters

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest