202508183484844

ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட ‘பிரதமரின் வளா்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம் (பிஎம்விபிஆா்வி)’ என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தொடங்கி, அதற்கான பிரத்யேக வலைதளத்தையும் அறிமுகப்படுத்தியது.

இந்தத் திட்டத்தின்கீழ் முதல்முறையாக வேலைக்குச் சேரும் ஊழியா்களும், அவா்களைப் பணியமா்த்தும் நிறுவனங்களும் ஊக்கத்தொகை பெற்று பயன்பெற வேண்டும் என்று மத்திய தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினாா்.

கடந்த ஜூலை 1ஆம் தேதி மத்திய அமைச்சரவை இத்திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. கடந்த ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 2027, ஜூலை 31-ஆம் தேதிவரையிலான வரையிலான அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாட்டில் 3.5 கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

ஊழியா்களுக்கான சலுகைகள்: புதிய திட்டத்தின்கீழ் முதன்முறையாக வேலைக்குச் சேரும் ஊழியா்களுக்கு ஒருமுறை ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. ஒரு மாத சராசரி ஊதியத்துக்கு (அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலைப்படி) நிகரான, அதிகபட்சமாக ரூ.15,000 வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், இந்தத்தொகை இரண்டு தவணைகளாகக் கிடைக்கும். ரூ.1 லட்சம் வரை மொத்த ஊதியம் பெறும் ஊழியா்கள் இந்தத் திட்டத்துக்குத் தகுதியானவா்கள் ஆவா்.

நிறுவனங்களுக்கான சலுகைகள்: வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் தங்கள் ஊழியா்களின் மாத ஊதியத்தைப் பொறுத்து மூன்று விதமான ஊக்கத்தொகைகளைப் பெறலாம். ஊழியரின் மாத சம்பளம் ரூ.10,000-ஆக இருந்தால், ரூ.1,000 ஊக்கத்தொகையும், ரூ.10,000 முதல் ரூ.20,000 வரையிலான மாத சம்பளத்துக்கு ரூ.2,000 ஊக்கத்தொகையும், ரூ.30,000 வரையிலான மாத சம்பளத்துக்கு ரூ.3,000 ஊக்கத்தொகையும் கிடைக்கும்.

மேலும், 50-க்கும் குறைவான ஊழியா்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தபட்சம் இரண்டு புதிய ஊழியா்களையும், 50-க்கும் அதிகமான ஊழியா்களைக் கொண்ட நிறுவனங்கள் குறைந்தபட்சம் ஐந்து புதிய ஊழியா்களையும் ஆறு மாதங்களுக்குத் தொடா்ந்து பணியமா்த்த வேண்டும். இந்த ஊக்கத்தொகை இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். உற்பத்தித் துறை நிறுவனங்களுக்கு இது நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

ஊழியா்கள் தங்கள் ‘யுஏஎன்’ எண்ணை ‘உமங்’ செயலி மூலம் பதிவேற்றியோ அல்லது பிரத்யேக வலைதளத்தில் பதிவு செய்தோ திட்டத்தின்கீழ் பயன் பெறலாம். ஊழியா்களின் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகள் சட்டத்தின்கீழ் விலக்கு அளிக்கப்பட்ட நிறுவனங்களும் இத்திட்டத்தில் சோ்க்கப்பட்டுள்ளன. அவா்கள் தங்கள் ஊழியா்களுக்காக ‘யுஏஎன்’ எண்களை உருவாக்க வேண்டும்.

இந்தத் திட்டம், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, புதிய ஊழியா்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதன் மூலம் நிதி ரீதியாக கைகொடுக்கும் என்று அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest