C_40_1_CH0098_3211370

திருப்பதி திருமலைக் கோவிலில் பக்தர்கள் செலுத்திய பரகாமணி காணிக்கையில் ரூ. 100 கோடி கொள்ளையடிக்கப்பட்டதாக அளிக்கப்பட்டுள்ள புகாரில் சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானம்(டிடிடி) வாரிய உறுப்பினரான ஜி. பானு பிரகாஷ் ரெட்டி கடந்த சனிக்கிழமை பரபரப்பான புகாரை தெரிவித்தார். திருமலை சுவாமியின் பரகாமணியில் ரூ. 100 கோடி திருடப்பட்டதாக அவர் பகிரங்கமாக அறிவித்தார்.

இந்த முறைகேடு, கடந்த ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் ஆட்சியில் நடைபெற்றதாகவும் தெரிவித்தார். திருமலை வரலாற்றில் இதுவரை நடைபெறாத மிகப்பெரும் கொள்ளை இது என்றும் கூறினார்.

“மக்கள் பக்தியுடன் உண்டியல்களில் செலுத்தும் காணிக்கை, கடந்த அரசின் நிர்வாகத்தால் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்கை சிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டுள்ள ஆந்திர உயர்நீதிமன்றம் ஒரு மாதத்துக்குள் விசாரணை அறிக்கையை சீல் இடப்பட்ட உரையில் சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளது.

பல ஆண்டுகளாக நடைபெற்ற கொள்ளையில் பெறப்பட்ட தொகை ரியல் எஸ்டேட் வணிகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் தலைவர்களுக்கும் உயரதிகாரிகளுக்கும் இதில் தொடர்புள்ளது. இந்த முறைகேடு நடைபெற்றபோது டிடிடி தலைவர் பதவியில் பூமண கருணாகர் ரெட்டி இருந்தார். ஆகவே, இது குறித்து அவர் பதிலளிக்க வேண்டும்” என்றார்.

இந்த நிலையில், குற்றம்சுமத்தப்பட்டுள்ள அதே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருப்பதி மக்களவைத் தொகுதி உறுப்பினராக பதவி வகிக்கும் எம்.பி. மடில்லா குருமூர்த்தி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், திருமலை திருக்கோவிலில் பரகாமணி முறைகேடு விவகாரத்தில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) விசாரணை நடத்த வலியுறுத்தியுள்ளார்.

கடிதத்தில் சொல்லப்பட்டுள்ளது என்ன?

உலகளவில் கோடிக்கணக்கான பக்தர்கள் பக்தியின்பால் செலுத்திய காணிக்கையே திருமலை பரகாமணியில் சேர்ந்துள்ள பெரும் நிதி. சுமார் 120 கோடி ஹிந்துக்களின் மனதில் பரகாமணி சிறப்பிடம் பெற்று விளங்குகிறது. இதில் அரசியல் செய்வதென்பது, அவர்களது ஆன்மிக நம்பிக்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தும்.

ஆந்திர பிரதேசத்தில் இப்போது, மதத்தை அரசியல் செய்வதற்கான ஒரு ஆயுதமாக கையாளும் முயற்சி நடைபெறுகிறது. இத்தகைய செயல்கள், மக்கள் ஜனநாயக நிர்வாகத்தின் மீது பூண்டுள்ள நம்பிக்கையை பலவீனம் அடையச் செய்யும்.

இந்த நிலையில், திருமலை பரகாமணி விவகாரத்தில் சிபிஐ மூலம் விரிவான விசாரணை நடத்த மத்திய அரசு உத்தரவிடக் கோரி வலியுறுத்துகிறேன். சார்பு நிலையற்ற வெளிப்படையான விசாரணை நடத்தப்படும்போது மட்டுமே, அரசியல் ரீதியாக புனையப்படும் பொய்யான தகவல்களுக்கு முட்டுக்கட்டை போட முடியும். அதன்பின், பக்தர்களிடம் திரும்பவும் நம்பிக்கையை கொண்டுவரச் செய்ய முடியும்.

மேலும், இந்த நடவடிக்கை பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் உரிய மாண்புடனும் உலகெலாம் உள்ள ஹிந்துக்களின் மத உணர்வுகளுக்கு உரிய மதிப்பளிக்கப்பட்டு பாதுகாக்கப்படுவதை மீண்டும் உறுதி செய்யும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tirupati YSRCP MP Seeks CBI Probe into Tirumala Parakamani Controversy

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest