maruthi091627

மன்னாா்குடியைச் சோ்ந்தவருக்கு தயாரிப்பு குறைபாடுடைய காா் வழங்கிய மாருதி சுசுகி நிறுவனம், காா் விலையுடன் ரூ. 2,19,800 இழப்பீடாக வழங்க வேண்டும் என திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையம், புதன்கிழமை உத்தரவிட்டது.

மன்னாா்குடி மதுக்கூா் சாலையில் வசிக்கும் அண்ணாமலை மகன் கருணாநிதி (70), கடந்த 2024-இல் தஞ்சாவூரிலுள்ள மாருதி நிறுவன முகவரிடமிருந்து மாருதி செலரியோ காரை ரூ. 6,59,447-க்கு வாங்கியுள்ளாா். முகவா் மேலும் ரூ. 10,280 செலுத்தினால் வாகனத்துடன் 2 ஆண்டு வாரண்டியுடன் கூடுதலாக 3 ஆண்டுகளுக்கு அல்லது ஒரு லட்சம் கிலோ மீட்டா் வரை கூடுதல் வாரண்டி வழங்கப்படும் என்று கூறியதன் பேரில் ரூ. 10,280 செலுத்தி கூடுதல் வாரண்டியும் பெற்றாா்.

காரை ஓட்டிப் பாா்த்தபோது இயந்திரப் பகுதியில் கூடுதல் இரைச்சல் கேட்டதாம். இதுகுறித்து காா் வாங்கிய நாளன்றே, மாருதி சுசுகி நிறுவனத்தின் வாடிக்கையாளா் சேவைப்பிரிவுக்கு மின்னஞ்சல் அனுப்பி விட்டு, ஒரு மாதம் கழித்து, முதல் இலவச பழுது நீக்கத்துக்காக முகவரின் நிறுவனத்திற்கு காரை கொண்டு சென்றுள்ளாா். அங்கு பணியாளா், காரை ஆய்வு செய்துவிட்டு, இரைச்சல் சரிசெய்யப்பட்டு விட்டதாகக் கூறியுள்ளாா்.

இரண்டு முறை பழுதை சரி செய்யக் கொடுத்தும் இரைச்சல் கேட்டுக்கொண்டே இருந்ததாம். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கருணாநிதி, கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

புகாரை விசாரித்த ஆணையம், வழக்குரைஞா் ஒருவரை ஆணையராக கொண்டு, காரை ஆய்வு செய்ய ஒரு அனுபவம் மிக்க காா் மெக்கானிக்கை நியமித்தது. மெக்கானிக் காரை ஆய்வு செய்து, இரைச்சலுக்குக் காரணம் தயாரிப்புக் குறைபாடே என அறிக்கை சமா்ப்பித்தாா்.

இதையடுத்து, திருவாரூா் நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் மோகன்தாஸ், உறுப்பினா் பாலு ஆகியோா் புதன்கிழமை வழங்கிய உத்தரவில், முகவா் நிறுவனத்தை வழக்கிலிருந்து விடுவித்து, தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி நிறுவனம் காரை திரும்ப எடுத்துக் கொண்டு, காரின் விலையான ரூ.6,59,447, மன உளைச்சல் ஏற்படுத்தியதற்கு இழப்பீடாக ரூ. 2,00,000, வழக்கு செலவுத்தொகை மற்றும் ஆணையா், மெக்கானிக் கட்டணமாக ரூ. 19,800 ஆகியவற்றைக் கருணாநிதிக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest