sp2

ஐபிஎல் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியின் பிராண்ட் மதிப்பு ரூ.2,306 கோடியாக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நட்சத்திர வீரர் விராட் கோலி அங்கம் வகிக்கும் பெங்களூரு அணி, ஐபிஎல் போட்டியின் தொடக்கம் முதலே இருந்து வருகிறது. கடைசியாக இணைந்த குஜராத் அணி கூட சாம்பியனாகிவிட்ட நிலையில், பிரதான வீரர்களின் பங்களிப்பு, மிகப்பெரிய அளவிலான ரசிகர்கள் பட்டாளத்தின் ஆதரவு போன்றவை இருந்தும், கடந்த 17 ஆண்டுகளாக பெங்களூரு அணிக்கு சாம்பியன் கோப்பை வசமாகாமல் இருந்தது.

இந்நிலையில், இந்த 18-ஆவது சீசனில் அந்த அணி சாம்பியனாகி வரலாறு படைத்தது. இதனால் சந்தையில் அந்த அணியின் பிராண்ட் மதிப்பு தற்போது அதிகரித்துள்ளதாக முதலீட்டு வங்கி நிறுவனமான “ஹுலிஹன் லாகி’-யின் அறிக்கை தெரிவித்துள்ளது.

அதன்படி, அந்த அணியின் தற்போதைய பிராண்ட் மதிப்பு ரூ.2,306 கோடியாக உள்ளது. முன்பு கோலோச்சிய சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), இந்த முறை ரூ.2,015 கோடி மதிப்புடன் 3-ஆம் இடத்துக்கு சறுக்கியுள்ளது. மும்பை இண்டியன்ஸ் அணி ரூ.2,076 கோடி மதிப்புடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது. 10 அணிகளிலும் அதிகபட்சமாக பஞ்சாப் கிங்ஸின் மதிப்பு இந்த ஆண்டு 39.6 சதவீதம் அதிகரித்து ரூ.1,208 கோடியாக உள்ளது. விளம்பரதாரர், ஊடகம், வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஐபிஎல் போட்டியின் ஒட்டுமொத்த மதிப்பானது 12.9 சதவீதம் அதிகரித்து, தற்போது ரூ.1.6 லட்சம் கோடியாக உள்ளது. இதில் ஐபிஎல் என்ற பிராண்டுக்கான தனி மதிப்பு மட்டும் 13.8 சதவீதம் அதிகரித்து ரூ.33,440 கோடியாக உள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest