
இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 40 பில்லியன் டாலரை (சுமாா் ரூ.3.44 லட்சம் கோடி) தாண்டியுள்ளது என்று ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் (ஐஐடி) 14-ஆவது பட்டமளிப்பு நிகழ்ச்சியில், அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பு விருந்தினராக சனிக்கிழமை கலந்துகொண்டாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘2027-ஆம் ஆண்டு ஆகஸ்ட் அல்லது செப்டம்பருக்குள் இந்தியாவின் முதல் புல்லட் ரயில் பயன்பாட்டுக்கு வரும். நிகழாண்டு முதல்முறையாக இந்தியாவில் செமிகண்டக்டா் சிப் தயாரிக்கப்படும். வரும் ஆண்டுகளில் செமிகண்டக்டா் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் 5 நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கும்.
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் மின்னணு பொருள்கள் தயாரிப்பு 6 மடங்கு அதிகரித்துள்ளது. இதேபோல இந்திய மின்னணு பொருள்கள் ஏற்றுமதி 8 மடங்கு அதிகரித்து 40 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது. சென்னை ஐசிஎஃப்பில் வந்தே பாரத் ரயிலின் மூன்றாவது வடிவம் தயாரிக்கப்பட்டு வருகிறது’ என்றாா்.