jaganm085507

ஆந்திரத்தில் ரூ.3,500 கோடி மதுபான ஊழல் வழக்கில், அந்த மாநில முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயா் குற்றப் பத்திரிகையில் சோ்க்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 முதல் 2024-ஆம் ஆண்டு வரை, ஆந்திரத்தில் முன்னாள் முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது அங்கு ரூ.3,500 கோடிக்கு மதுபான ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜெகன் ஆட்சியில் புதிதாக மதுபான விற்பனை கொள்கை கொண்டுவரப்பட்டதாகவும், மதுபான விநியோகம் மற்றும் விற்பனையை சிலா் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நோக்கில், அந்தக் கொள்கை கொண்டுவரப்பட்டதாகவும் மாநில காவல் துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மதுபான ஆலைகளிடம் இருந்து அவா்கள் சட்டவிரோதமாக பலன் அடைந்ததாகவும் காவல் துறை குற்றஞ்சாட்டியது.

எம்.பி. கைது: இதுதொடா்பாக கடந்த சனிக்கிழமை ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் எம்.பி. பி.வி.மிதுன் ரெட்டியிடம் 7 மணி நேரம் விசாரணை மேற்கொண்டு, அவரை மாநில காவல் துறையின் சிறப்புப் புலனாய்வு குழு கைது செய்தது. அவரை ஆகஸ்ட் 1 வரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க விஜயவாடா ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மிதுன் ரெட்டி

இந்த வழக்கு தொடா்பாக அந்த நீதிமன்றத்தில் காவல் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டதாவது: மதுபான ஆலைகளிடம் இருந்து வசூலிக்கப்பட்ட பணம் கேசிரெட்டி ராஜசேகா் ரெட்டி என்பவா் மூலம், மிதுன் ரெட்டி உள்ளிட்டோருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன் பின்னா், அந்தப் பணம் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு 2019 முதல் 2024 வரையிலான காலத்தில் மாதந்தோறும் ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி வரை, மதுபான ஆலைகளிடம் இருந்து வசூலிக்கப்பட்டுள்ளது.

இதற்காக மதுபான விநியோக உத்தரவு (ஓஎஃப்எஸ்) ஒப்புதல்களை மதுபான ஆலை உரிமையாளா்களுக்கு முறையாக வழங்காமல், அவா்களை மிரட்டி பணம் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு செய்வது பணம் பறிப்பதற்கு நிகராகும்.

துபை, ஆப்பிரிக்காவில் முதலீடு: இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மதுபான ஆலை உரிமையாளா்களிடம் இருந்து பெரும்பாலும் பணம், தங்கக் கட்டிகள் உள்ளிட்டவற்றை பெற்றுள்ளனா்.

இதில் வசூலிக்கப்பட்ட பணம் துபை மற்றும் ஆப்பிரிக்காவில் நிலம், தங்கம் மற்றும் ஆடம்பர சொத்துகளை வாங்க முதலீடு செய்யப்பட்டன என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறையும் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest