
அருணாசலப் பிரதேசத்தில் ரூ. 5000 கோடி மதிப்புடைய 13 திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப். 22) அடிக்கல் நாட்டவுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாநில அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
இதனையொட்டி சாலைப் பராமரிப்பு, மேடை அலங்காரங்கள், மக்கள் கூடுவதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை அருணாச்சல் அரசு செய்து வருகிறது.
இது தொடர்பாக அருணாச்சல் முதல்வர் பெமா காண்டு தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”பிரதமர் நரேந்திர மோடியின் வருகையையொட்டி, இடா நகரிலுள்ள ஐஜி பூங்காவில் முன்னேற்பாட்டுப் பணிகளை மேற்பார்வையிட்டேன்.
பிரதமரிடமிருந்து இதுபோன்ற ஒரு அக்கறையை அருணாச்சல் மக்கள் இதுவரை பார்த்ததில்லை. மக்களின் கனவு மற்றும் மேம்பாட்டிற்கான உண்மையான அக்கறையை பிரதமரிடம் பார்க்கமுடிகிறது. பல்வேறு நலத் திட்ட உதவிகளைத் தொடக்கிவைத்து முக்கியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்பதில் ஆர்வமுடன் இருக்கிறோம். அருணாசலின் அனைத்து மூலைமுடுக்குகளுக்கும் பிரதமரின் நலத்திட்டங்கள் சென்று சேரும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
1,830 கி.மீ. நெடுஞ்சாலை உள்பட ரூ. 1,291 கோடி மதிப்பிலான 10 உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த சாலையின் மூலம் இந்தியா – மியான்மர் எல்லையிலுள்ள 67 கிராமங்கள், இந்தியா – பூடான் எல்லையிலுள்ள 55 கிராமங்கள் உள்பட அருணாசலில் 122 கிராமங்கள் பலனடையும்.
4ஜி பயன்பாடு, போக்குவரத்து, வணிகம் போன்றவை அதிகரித்தாலும், எல்லைகள் இணைப்பு, தேசிய பாதுகாப்பு போன்றவற்றிற்கு இந்த சாலைகள் வழிவகுக்கும் என அருணாச்சல் அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | 42 கி.மீ. மாரத்தானில் தங்கம்! ஸ்கேட்டிங்கில் இந்தியா புதிய சாதனை!