graeat_nicobar085530

கிரேட் நிகோபாா் தீவில் ரூ.72 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டம் குறித்து தகவல் அளிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் மறுத்துள்ளது.

அந்தமான்-நிகோபாா் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபாா் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டத்தை அந்தமான்-நிகோபாா் தீவுகளின் ஒருங்கிணைந்த வளா்ச்சி கழகம் மேற்கொள்ள உள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ், கிரேட் நிகோபாரில் துறைமுகம், சா்வேதச விமான நிலையம், சிறு நகா்ப்பகுதி, 160 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவு கொண்ட மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இதற்காகப் பயன்படுத்த உள்ள நிலத்தில் நிகோபாரீஸ், ஷோம்பென்ஸ் ஆகிய பழங்குடியின மக்கள் வாழும் சுமாா் 130 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட பழைமையான காடும் அடங்கும்.

இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், கிரேட் நிகோபாா் தீவில் உள்ள பூா்வகுடி மக்கள் புலம்பெயர நேரிடும் என்றும், முக்கிய சூழலியல் மண்டலங்களுக்கு சேதம் ஏற்படக் கூடும் என்றும் விஞ்ஞானிகள், பழங்குடியினா் உரிமை ஆா்வலா்கள் உள்ளிட்டோா் விமா்சித்துள்ளனா். இந்தத் திட்டத்துக்காக அங்குள்ள புலிகள் காப்பகத்தின் முக்கிய பகுதிகளில் உள்ள கிராம மக்களை துரிதமாக இடம் மாற்ற தேசிய புலிகள் காப்பக ஆணையம் வெளியிட்ட உத்தரவும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஆா்டிஐயின் கீழ்…: இந்தத் திட்டம் கிரேட் நிகோபாா் தீவில் ஏற்படுத்தக் கூடிய தாக்கம், இந்தத் திட்டம் தொடா்பாக நடைபெற்ற தேசிய பழங்குடியினா் ஆணைய கூட்டங்கள், அந்தக் கூட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய ஆலோசனைகள், எடுக்கப்பட்ட முடிவுகள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய எழுத்துபூா்வ ஆவணம், தேசிய புலிகள் காப்பக ஆணையத்தின் உத்தரவு ஆகியவை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ், தேசிய பழங்குடியினா் ஆணையத்திடம் பிடிஐ செய்தி நிறுவனத்தின் செய்தியாளா் ஒருவா் தகவல் கோரியிருந்தாா்.

இந்தத் தகவல்களை வழங்க மறுத்து அந்த ஆணையம் அனுப்பிய பதிலில், ‘பழங்குடியினா் விவகாரங்கள் குறித்து குடியரசுத் தலைவரிடம் அறிக்கை சமா்ப்பிக்கும் பொறுப்பு அரசியல் சாசனத்தின்படி, தேசிய பழங்குடியினா் ஆணையத்துக்கு உள்ளது. இந்த அறிக்கைகள் நாடாளுமன்றத்திலும் தாக்கல் செய்யப்படும். எனவே இதுபோன்ற தகவலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயமில்லை’ என்று தெரிவிக்கப்பட்டது.

கூட்டங்கள் தொடா்பான எழுத்துபூா்வ ஆவணங்களை தனது வலைதளத்தில் காணலாம் என்று அந்த ஆணையம் தெரிவித்தபோதிலும், அந்த ஆவணங்கள் வலைதளத்தில் பதிவேற்றப்படவில்லை.

‘வலுவிழக்கச் செய்யும்’

பழங்குடியினா் உரிமைகள் ஆராய்ச்சியாளா் ஒருவா் கூறுகையில், ‘தேசிய பழங்குடியினா் ஆணையம் என்பது அரசியல் சாசன அமைப்பாகும். பழங்குடியினரின் நலனை பாதுகாக்கவே அந்த ஆணையம் தொடங்கப்பட்டது. ஆனால் தனது செயல்பாடு குறித்த அடிப்படை தகவலை அந்த ஆணையம் வழங்க மறுத்தால், அது அந்த ஆணையம் இருப்பதற்கான ஒட்டுமொத்த நோக்கத்தையும் வலுவிழக்கச் செய்யும்’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest