
நடிகர் ரோபோ சங்கர் (46) உடல்நலக் குறைவால் காலமானார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு, இவருக்கு மஞ்சள் காமாலை (Jaundice) நோய் ஏற்பட்டது. தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வந்த இவர் உடல்நலக் குறைவால், நேற்று முன்தினம் காலை சென்னையில் உள்ள பெருங்குடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி, நேற்று (செப். 18) இரவு உயிரிழந்தார்.

கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர்.
இந்த நிகழ்ச்சியில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமடைந்தார்.
தனுஷின் ‘மாரி’, விஜய்யின் ‘புலி’, சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ உள்ளிட்ட படங்களில் நடித்து மக்களின் மனதை ஈர்த்திருந்தார்.
திரைப்பிரபலங்கள் பலரும் இவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் கவிஞரும், பாடலாசிரியருமான சினேகனும் அவரது மனைவி கனிகாவும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி இருக்கின்றனர்.
பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சினேகன், “ரோபோவின் முதல் மேடையிலிருந்து அவருடன் நான் இருந்திருக்கிறேன். எந்த மேடை என்றாலும், அதை தனக்கானதாக மாற்றிக் கொள்வார். நாளை மறுதினம் பேரனுக்கு காதுகுத்து ஏற்பாடு செய்திருந்தார்.

தன் உடல்நிலையை அவர் சரியாகக் கவனித்துக் கொள்ளவில்லை என என்னைப் போல பல நண்பர்கள் அவரிடமே கவலைப்பட்டுள்ளோம்.
இந்த இடத்திற்குக்கூட அவரைப் போராடி மீட்டுக் கொண்டு வந்தோம். இருந்தபோதும் மனம் சொன்னதை மட்டுமே கேட்டு செயல்பட்டார். அதன் விளைவாக இவ்வளவு விரைவாக நம்மை விட்டுச் சென்றுவிட்டார்.
இந்த இழப்பிலிருந்து எப்படி வெளியே வரப்போகிறோம் எனத் தெரியவில்லை” என்று வேதனை தெரிவித்திருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…