
நடிகர் ரோபோ சங்கர் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மஞ்சள் காமாலை நோய்க்கு சிகிச்சைப் பெற்று வந்த ரோபோ சங்கர் (வயது 46), திடீர் உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உடலுறுப்புகள் செயலிழந்து வியாழக்கிழமை இரவு காலமானார்.
ரோபோ சங்கரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத் துறையினர், ரசிசர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”திரைக்கலைஞர் ரோபோ சங்கர் மறைவெய்திய செய்தியறிந்து வருத்தமுற்றேன். மேடைகளில் துவங்கி, சின்னத்திரை – வண்ணத்திரை என விரிந்து, தமிழ்நாட்டு மக்களை மகிழ்வித்தவர் ரோபோ சங்கர்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் – கலையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் எக்ஸ் பதிவு:
“பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், அதிமுக நட்சத்திரப் பேச்சாளருமான ரோபோ சங்கர், உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் ரோபோ சங்கரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.”
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பதிவு:
”நடிகர் ரோபோ சங்கர் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். தன்னுடைய நகைச்சுவை திறனால், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவலையில் இருந்து மீட்டவர். இவரது மறைவு, திரையுலகிற்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் பேரிழப்பாகும்.
அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி”