
கதையைச் சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இன்ஸ்டாகிராமில் கணவன் – மனைவி இணைந்து காணொலி துணுக்குகளை வெளியிட்டு வைரலாகி, பின் என்னென்ன விடியோக்களை போட்டால் அதிக பணம், வைரலாவோம் என சிந்தித்து, அதனால் தவறான முடிவுகளை எடுப்பதால் என்னென்ன சிக்கல்களைச் சந்திக்கிறார்கள்? என்பதுதான் கதை.
கொஞ்ச விரிவாகச் சொல்ல வேண்டுமென்றால், இன்றெல்லாம் சமூக வலைதளங்களில் முக்கியமாக இன்ஸ்டாகிராமில் வைரலாக வேண்டும் என்பதற்காகவே பலரும் பல விஷயங்களை, அந்தரங்க தகவல்களை வெளியிடுகின்றனர். உண்மையில், நாமெல்லாம் நல்ல இணைகள்தானா என்பதையே அறியாமல் விடியோக்களில் சிரித்து, பிறருக்கு ‘இல்லற’ அறிவுரைகளை வழங்கும் இன்ஸ்டா இணைகள் தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவு குறைகளுடன், புரிதலற்று, ரகசியங்களுடன் இருக்கின்றனர் என்பதை சஸ்பென்ஸ் த்ரில்லராக ‘டிரெண்டிங்’ பேசுகிறது.
நடிகர் கலையரசன், பிரியாலயா இருவரும் சென்னையில் வசிக்கும் இன்ஸ்டா பிரபலங்கள். காதல் இணையான இவர்கள் இன்ஸ்டா, யூடியூப் வருமானத்தை நம்பி முழு நேரமாக அச்செயலிகளில் காணொலிகளைப் பதிவேற்றி அதன்மூலம் கிடைக்கும் வருவாயில் ஆடம்பர வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். ஒருநாள், அவர்களின் யூடியூப் கணக்கு முடக்கப்படுகிறது. இனி அதிலிருந்து வருமானம் வராது என்பதால் ஆடம்பரங்களால் உருவான கடன்கள் அழுத்துகிறது.
அப்போது, இருவரையும் அழைக்கும் ஒரு நபர், ‘நான் சொல்லும் விளையாட்டை விளையாண்டால், 7 நாளில் ரூ. 2 கோடி கிடைக்கும். உங்களின் வீட்டிற்குள்ளேயே விளையாட்டு நடக்கும்” என்கிறார். இருவரும் ஒப்புக்கொள்ள கதை சூடுபிடிக்கிறது. நல்ல புரிதலான ஜோடி என சமூக வலைதளங்களில் பெயர் எடுத்த இணை, ஒவ்வொரு விளையாட்டின் போதும் அதன் சுயத்தை இழந்து போலித்தனங்களால் தடுமாறி இறுதியில் என்ன ஆனார்கள் என்பதை திருப்பங்களால் சொல்லியிருக்கின்றனர்.
இயக்குநர் சிவராஜ் இன்றைய காலத்தில் பேச வேண்டிய முக்கியமான விஷயத்தை கதையாக மாற்றியிருக்கிறார். டிரெண்டிங், வைரலுக்குப் பின்னால் செல்பவர்கள் எதையெல்லாம் இழக்கிறார்கள் என்பதையும் இதனால் தனிமனித அறம் எப்படி அழிகிறது என்பதையும் நேர்த்தியாகப் பதிவு செய்கிறார்.
ஒட்டுமொத்த திரைப்படமும் ஒரே வீட்டிற்குள் நடந்தாலும் எங்கும் சலிப்பு தட்டாமல் சுவாரஸ்யமாகவும், சிந்திக்கும் வகையிலும் கதையை, உரையாடல்களை எழுதியிருக்கும் விதமும் சிறப்பு. ‘காதல் என்றால் என்ன தெரியுமா? ஒருத்தரை ஒருத்தர் புரிந்துகொள்வதா? இல்லை. புரிந்துகொள்ள முயற்சி செய்யாமல் இருப்பது’ போன்ற வசனங்கள் கதைக்கு பலமாக அமைந்திருக்கின்றன.
பணத்தின் மீதான ஆசை ஆரோக்கியமான உறவை எப்படியெல்லாம் சிதைக்கிறது என்பதைச் சமூக வலைதளப் பின்னணியில் பேசியிருப்பதும், கதைகேற்ப நல்ல எடிட்டிங்கும் இறுதிவரை படத்தை அலுப்பு தட்டாமல் பார்த்துக் கொள்கிறது.
ஆனால், இப்படம் கிளைமேக்ஸை நோக்கி நகரும்போது கொஞ்சம் செயற்கைத்தனத்துடன் நிறைவடைந்தது ஏமாற்றத்தைக் கொடுத்தது. படத்தின் இடைவேளைக்குப் பின்பே குணமாற்றங்கள் காட்டப்பட்டு விடுவதால் அடுத்தடுத்த முடிவுகளும் தெரிந்துவிடுகின்றன. இருந்தும், பிரேம் குமார் கதாபாத்திரத்தை உள்ளே கொண்டுவந்து திருப்பத்தைக் கொடுத்தது நன்றாக இருந்தது.
பொதுவெளியில் இருக்கும் பிம்பங்கள் ஒரு மனிதரை அணுஅணுவாக நெருங்கும்போது உடையும் பிம்பங்களும் வேறுவேறானவை என்பதை காதல், ஏமாற்றம் பின்னணியில் பேசப்பட்ட கதைக்கு இசையமைப்பாளர் சாம் சிஎஸ் சில நல்ல பின்னணி இசைகளைக் கொடுத்திருக்கிறார். விளையாட்டு ஆரம்பமாகும் காட்சிகளில் ஒருவித எதிர்பார்ப்பு வருவதற்கு பின்னணி இசைக்கு பெரிய பங்குண்டு.
நடிகர் கலையரசன் கதாநாயகனாக நன்றாக நடித்திருக்கிறார். கதையின் டுவிஸ்டுகளுக்கு ஏற்ப தன் நடிப்பில் பரிணாமத்தைக் கொடுத்திருக்கிறார். நடிகர் பிரியாலயாவும் நல்ல தேர்வு. செயற்கைத்தனம் தெரியாத நடிப்பை வழங்கியிருப்பதால் இருவரும் கதையைச் சரியாகக் கையாண்டுள்ளனர்.
படத்தைப் பார்த்து முடிக்கும்போது சில விஷயங்களைக் கூடுதலாக இணைந்திருந்தால் இன்னும் சிறப்பான படமாக வந்திருக்கும் எனத் தோன்றினாலும், சுவாரஸ்யமான படம் என்கிற எண்ணத்தையும் தருகிறது.
actor kalaiyarasan, priyalaya’s trending movie released today in theatres directed by sivaraj n.