
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டத்துக்குட்பட்ட திருப்பத்தூர் பிரதான சாலையோரமாக அமைந்திருக்கிறது `காரப்பட்டு’ அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி. இந்தப் பள்ளியில், ஊமையனூர், வண்ணாம்பள்ளி, சந்தகொட்டாவூர், தகரப்பட்டி, கதவணி, தாதக்குள்ளனூர், ஆதாலியூர், வளத்தானூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு குக்கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,500 மாணவ-மாணவிகள் பயில்கின்றனர். கற்பித்தல் தரம் காரணமாக மாணவர்களுக்கு நிகராக மாணவிகளின் சேர்க்கையும் சரிப்பாதியாக இருக்கிறது.

கற்பித்தல் மற்றும் கற்றல் நோக்கங்களால், இப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுகின்றனர். ஆண்டுதோறும் பள்ளியின் தேர்ச்சிவிகிதமும் அதிகரித்து வருகிறது. ஆனாலும், போதுமான அளவுக்கு சுகாதார வசதிகளுடன் கழிப்பறைகள் இல்லாதது, மாணவ, மாணவிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தி வருகிறது.
மாணவர்கள் பயன்பாட்டுக்காக 4 யூனிட் கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு யூனிட்டில் 2 யூரினல், 1 டாய்லெட் இருக்கின்றன. மாணவிகள் பயன்பாட்டுக்கும் இதே எண்ணிக்கையில்தான் கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், நீண்ட நேரம் கழிப்பறைக்கு வெளியே மாணவ, மாணவிகள் காத்திருக்க வேண்டிய அவலநிலை தினந்தோறும் ஏற்படுகிறது.

“சுகாதாரமான முறையில் சானிட்டரியும் செய்யப்படுவதில்லை. கழிப்பறை அறையின் கதவுகள் செல்லரித்து உடைந்துவிட்டன. அதை மாற்றாததால், கழிப்பறை அறையை பயன்படுத்த முடிவதில்லை. தரை, சுவர் என எங்குப் பார்த்தாலும் கறை படிந்திருக்கின்றன. சரியான தண்ணீர் வசதியும் இல்லை. மாதவிடாய் காலத்தில் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறோம்’’ என்கிற குற்றச்சாட்டையும் மாணவிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர். மேலும், “வகுப்பறைகளுக்கு தரும் முக்கியத்துவத்தை கழிப்பறைகளுக்கும் தர வேண்டும்’’ எனவும் மாணவிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.