
பொதுத் துறை வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் கடந்த மூன்று நிதியாண்டுகளாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை பணம், ரூ. 52,174 கோடியை தாண்டியதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வங்கிகளில் உள்ள உரிமைகோரப்படாத வைப்புத்தொகை ரூ. 42,271 கோடியாக இருந்த நிலையில், 2022-2024 வரையிலான காலகட்டத்தில் ரூ. 52,174 கோடியாக உயர்ந்துள்ளது.
மாநிலங்களவையில் துணை நிதியமைச்சர் பங்கஜ் செளத்ரி எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த அறிக்கையில்,
2024 நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளில் ரூ. 45,140.78 கோடி பணம், தனியார் துறை வங்கிகளில் ரூ. 7,033.82 கோடி உரிமை கோரப்படாமல் உள்ளது.
இவை இந்திய ரிசர்வ் வங்கியால் பராமரிக்கப்படும் வைப்புத்தொகையாளர் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிதிக்கு மாற்றப்பட்டன.
இதேபோன்று, 2022 முதல் 2024 வரையிலான நிதியாண்டில் காப்பீட்டு நிறுவனங்களில் உள்ள உரிமைகோரப்படாத தொகை ரூ. 21,718 கோடியாக உள்ளது.
ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கையின்படி, கோரப்படாத மொத்த வைப்புத்தொகை ரூ. 78,212.53 (2024 மார்ச் வரை) கோடியாக உள்ளது.
உரிமை கோரப்படாத வைப்புத்தொகை – தகவல்களை அணுகுவதற்கான அணுகுமுறை என்ற புதிய வலைதளத்தை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதில், பதிவு செய்யப்பட்ட எந்தவொரு பயனரும், உரிமைகோரப்படாமல் உள்ள தொகையில் அளவை, வங்கிகள் வாரியாகத் தெரிந்துகொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | அமேசான் சுதந்திர தின சலுகை ஜூலை 31 முதல் தொடக்கம்! என்னென்ன வாங்கலாம்?