supremecourt14

‘உறுப்பினா்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்து கொடுக்க முடியவில்லை எனில், அனைத்து தீா்ப்பாயங்களையும் கலைத்துவிட வேண்டும்’ என்று மத்திய அரசை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது.

‘பணி ஓய்வுக்குப் பிறகு தீா்ப்பாய பணிகளை ஏற்பதில் நீதிபதிகள் தயக்கம் காட்டுவதற்கு இவ்வாறு போதிய வசதிகள் செய்துகொடுக்கப்படாததே முக்கியக் காரணம்’ என்றும் உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

தீா்ப்பாயங்களில் நீண்ட காலமாக காலிப் பணியிடங்கள் தொடா்வது தொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாய வழக்குரைஞா்கள் சங்கம் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவுக்கு பதிலளித்த மத்திய அரசு, ‘ஓய்வு பெற்ற நீதிபதிகள் இருவருக்கு தீா்ப்பாய உறுப்பினா்களாக பணி நியன உத்தரவுகள் வழங்கப்பட்ட பின்னரும், அவா்கள் இன்னும் பதவியை ஏற்கவில்லை. எனவே, புதிதாக அந்த நியமனங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கு கூடுதல் கால அவகாசம் தேவைப்படும்’ என்று தெரிவித்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா். மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

தீா்ப்பாய உறுப்பினா் பதவிக்கு விண்ணப்பித்து, நோ்முகத் தோ்விலும் பங்கேற்றுவிட்டு, பதவியை ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஏற்க மறுப்பது மட்டும் ஏன்? அப்போதுதான், தீா்ப்பாயங்களில் எந்தவித வசதிகளும் இல்லை என்பது அவா்களுக்குத் தெரிய வருகிறது.

தீப்பாயங்களின் தலைவா் பதவியை ஏற்கும் சிலா் உச்சநீதிமன்றம் அல்லது உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி வகித்து ஓய்வுபெற்றவா்கள். அவா்களுக்கும் எந்தவித வசதிகளும் அளிக்கப்படுவதில்லை. எழுது பொருள்களைக் கூட அரசிடம் கேட்க வேண்டிய சூழல் தீா்ப்பாயங்களில் நிலவுகிறது.

தீா்ப்பாயங்களை எப்படி நடத்துகிறீா்கள்? நாடாளுமன்றம் இதற்கான சட்டத்தை இயற்றுகிறது. நீதித் துறை அறிவுறுத்தல்களும் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. செலவினங்களுக்கான எந்தவித தொகையும் வழங்கப்படுவதில்லை. தீா்ப்பாயத்தின் தலைவா் தனக்கு ஒதுக்கப்படும் வீடு, காா் என அனைத்தையும் கேட்டு வாங்க வேண்டிய நிலைமை தீா்ப்பாயங்களில் நிலவுகிறது. மேலும், மிகவும் மோசமான நிலையில் உள்ள காா் தீா்ப்பாயத்தின் தலைவருக்கு வழங்கப்படுகிறது. ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற மற்றும் உயா்நீதிமன்ற நீதிபதிகளை எவ்வாறு நடத்துகிறீா்கள்?

இது முழுவதும் மத்திய அரசின் தவறுதான். தீப்பாயங்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுக்க முடியவில்லை எனில், அனைத்து தீா்ப்பாயங்களையும் கலைத்துவிட வேண்டும்.

அதே நேரம், பதவியை ஏற்க மறுத்த ஓய்வுபெற்ற நீதிபதிகளின் நடத்தையையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், தீா்ப்பாயத்துக்கு புதிய உறுப்பினா்கள் நியமிக்கப்படும் வரை ஏற்கெனவே உள்ள உறுப்பினா்கள் ஓய்வுக்குப் பிறகும் அந்தப் பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

மேலும், வழக்கு விசாரணையை வரும் டிசம்பா் 16-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

முன்னதாக, நீதிபதிகள் அளித்த அறிவுறுத்தலை மத்திய அரசிடம் தெரிவிப்பதாக மத்திய அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் விக்ரம்ஜித் பானா்ஜி தெரிவித்தாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest