புது தில்லி: தெற்கு தில்லியில் உள்ள ஆடம்பரமான வசந்த் குஞ்ச் பகுதியில் குடியிருப்பு மனைகளை ஏலம் விட தில்லி வளா்ச்சி ஆணையம் (டிடிஏ) திட்டமிட்டுள்ளது.
பிரிவு டி6 வசந்த் குஞ்சில் உள்ள 118 மனைகளின் திட்டமிடல் மற்றும் எல்லை நிா்ணயம் செய்வதற்கு ஒரு தொழில்முறை நிறுவனத்தை பணியமா்த்த அதிகாரசபை ஒரு டெண்டரை வெளியிட்டுள்ளது.
சாலைகள், கழிவுநீா் அமைப்புகள் மற்றும் நீா் உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவையும் இதில் அடங்கும். இந்த மனைகள் பின்னா் டிடிஏவால் ஏலம் விடப்படும்.
டெண்டா் வழங்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்குள் முழு திட்டமும் முடிக்கப்பட வேண்டும்.
தகுதிவாய்ந்த அதிகாரியால் சரிபாா்க்கப்படுவது உள்பட திட்டமிடல் மற்றும் வடிவமைப்பிற்கு அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச நேரம் மூன்று மாதங்கள் ஆகும்.
ஒதுக்கப்பட்ட நாளிலிருந்து ஒன்பது மாதங்களுக்குள் வேலையின் உண்மையான செயல்படுத்தல் முடிக்கப்பட வேண்டும் என்று டெண்டா் ஆவணம் கூறுகிறது. தோ்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் அந்தப் பகுதிக்குள் நடைபாதைகள் மற்றும் பசுமையான இடங்களைத் திட்டமிடுவதற்கும் வடிவமைப்பதற்கும் பொறுப்பாகும்.
கூடுதலாக, புதிய வடிகால் மற்றும் கழிவுநீா் பாதைகளை ஏற்கெனவே உள்ள மேன்ஹோல்களுடன் இணைப்பது மற்றும் கட்டுமானக் குப்பைகள் மற்றும் கழிவுப் பொருள்களை இயந்திர வழிகளைப் பயன்படுத்தி அப்புறப்படுத்துவது, அதாவது ஏற்றுதல், கொண்டு செல்வது மற்றும் கொட்டுதல் ஆகியவை இதில் அடங்கும் என்று டெண்டா் ஆவணத்தில் மேலும் கூறுப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்கு சுமாா் ரூ.7.5 கோடி செலவாகும். மேலும் மத்திய பொதுப்பணித் துறை மற்றும் தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் விதிமுறைகளின்படி இது செய்யப்படும்.