
வதோதராவில் இடிந்து விழுந்த பாலத்திற்கு இணையாக புதிய பாலம் கட்ட குஜராத் அரசு அனுமதி அளித்துள்ளது.
குஜராத்தில் வதோதரா-ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில், மஹிசாகா் ஆற்றின் குறுக்கே 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாலத்தின் ஒரு பகுதி கடந்த 9ஆம் தேதி திடீரென இடிந்து விழுந்தது.
அப்போது, பாலத்தில் சென்று கொண்டிருந்த 2 லாரிகள், 2 வேன்கள், ஒரு ஆட்டோ, ஒரு காா் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றுக்குள் விழுந்தன.
பல அடி உயரம் வரையிலான அடா்ந்த சேற்றில் வாகனங்கள் சிக்கிக் கொண்டன.
இந்த சம்பவத்தைத் தொடா்ந்து, காவல் துறையினா், தீயணைப்புப் படையினா், மாநகராட்சிப் பணியாளா்கள், தேசிய-மாநிலப் பேரிடா் மீட்புப் படையினருடன் உள்ளூா் மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனா்.
ஒரே குடும்பத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 11 பேரின் உடல்கள் புதன்கிழமை மீட்கப்பட்டன. தற்போது இவ்விபத்தில் பலி எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
காணாமல் போன ஒருவரைத் தேடும் பணி தொடர்கிறது என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணை அறிக்கையைத் தொடர்ந்து பொதுப்பணித் துறையைச் சேர்ந்த நான்கு பொறியாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட்ட முதல்வர் பூபேந்திர படேல், 30 நாள்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
தமிழகத்தில் 40 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்!
இந்த நிலையில் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் முஜ்புர் அருகே புதிய பாலம் கட்டுவதற்கு முதல்வர் பூபேந்திர படேல் ஞாயிற்றுக்கிழமை சாலைகள் மற்றும் கட்டடங்கள் துறைக்கு நிர்வாக ஒப்புதல் அளித்தார். புதிய பாலத்தை 18 மாதங்களில் கட்ட அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மேலும் டெண்டர் செயல்முறையும் தொடங்கப்பட்டுள்ளது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இந்த திட்டம் தொடர்பான பணிகளுக்காக ரூ.212 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.