
புது தில்லி: இந்தியா உலகின் நான்காவது பெரிய பொருளாதாரம் மட்டுமல்ல, வருமான சமத்துவத்திலும் உலக அளவில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது என உலக வங்கி தெரிவித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான சமத்துவமின்மைக்கான கினி குறியீட்டில் இந்தியா 25.5 மதிப்புகளும், ஸ்லோவாக் 24,1 மதிப்புகளும், ஸ்லோவேனியா 24.3 மதிப்புகளும், பெலாரஸ் 24.4 மதிப்புகளும் பெற்று முதல் மூன்று இடங்களை பெற்றுள்ளன.
ஸ்லோவாக் குடியரசு (24.1), ஸ்லோவேனியா (24.3), பெலாரஸ் (24.4) ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக இந்தியா ‘மிதமான குறைந்த’ ஏற்றத்தாழ்வு பிரிவில் (கினி குறியீட்டு மதிப்பு 25 முதல் 30 வரை) இடம்பெற்றுள்ளது. இந்த பட்டியலில் உலகின் முன்னணி பொருளாதார நாடுகளான சீனா 35.7 மதிப்புகளும், அமெரிக்கா 41.8 மதிப்புகளும் பெற்றுள்ளது.
167 நாடுகளுக்கு இடையேயான இந்த குறியீட்டு தரவரிசையில் உலக அளவில் இந்தியா நான்காவது வருமான சமத்துவம் கொண்ட நாடாக மாறியுள்ளதற்கு இந்தியாவின் தீவிர வறுமை விகிதம் பெரியளவில் குறைந்ததே, வருமான சமத்துவமின்மை குறைய காரணம் என தெரிவித்துள்ளது.
மேலும், பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாட்டிற்கு இது ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இந்தியாவின் பொருளாதார முன்னேற்றம் அதன் மக்கள்தொகையில் எவ்வாறு சமமாகப் பகிரப்படுகிறது என்பதையே இது பிரதிபலிக்கிறது.
இந்தியாவில் தீவிர வறுமை விகிதம் கடந்த 2011-12-இல் 16.2 சதவீதத்திலிருந்து 2022-23-இல் வெறும் 2.3 சதவீதமாகக் குறைந்துள்ளன என தரவுகள் தெரிவிக்கின்றன.
கினி குறியீட்டில் ஏற்பட்டுள்ள இந்த நிலையான முன்னேற்றத்துக்கு, கிராமப்புற மற்றும் நகா்ப்புறங்களில் வறுமையைக் குறைப்பதில் நாடு அடைந்த நிலையான வெற்றி முக்கியக் காரணியாக கருதப்படுகிறது.
மேலும், கடந்த 10 ஆண்டுகளில் சுமாா் 17.1 கோடி இந்தியா்கள் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனா்.
ஒரு நாட்டில் மக்களிடையே வருமானம், செல்வம் அல்லது நுகா்வு எவ்வளவு சமமாகப் பகிா்ந்துள்ளது என்பதை அளவிடும் ஒரு கருவிதான் கினி குறியீடு.
இதன் மதிப்பு பூஜ்ஜியம் முதல் நூறு வரை இருக்கும். பூஜ்ஜியம் என்பது முழுமையான வருமான சமத்துவத்தையும், நூறு என்பது ஒரு நபருக்கு வருமானம், செல்வம் அல்லது நுகர்வு உள்ளது, மற்றவர்களுக்கு எதுவும் இல்லை, எனவே முழுமையான வருமான சமத்துவமின்மையும் குறிக்கிறது. அதாவது, கினி குறியீட்டு மதிப்பு குறைவாக இருந்தால், அந்நாட்டில் சமத்துவமின்மை குறைவாக இருக்கிறது என்பதாகும்.
12 நாடுகளுக்கு டிரம்ப் கையெழுத்திட்ட கடிதங்கள் அனுப்பி வைப்பு