deepa-jayakumar

மறைந்த முதல்வா் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி நிலுவைத் தொகை ரூ.36 கோடியை செலுத்தக் கோரி வருமான வரித் துறை அனுப்பிய நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

மறைந்த முதல்வா் ஜெயலலிதா செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கித் தொகையான ரூ.36 கோடியை செலுத்தும்படி, வருமான வரித் துறை ஜெயலலிதாவின் சட்டபூா்வ வாரிசான ஜெ.தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீஸை எதிா்த்து ஜெ.தீபா சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், நோட்டீஸுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன் விசாரணைக்கு வந்தபோது, வருமான வரித் துறை தரப்பில், மறைந்த முதல்வா் ஜெயலலிதாவின் வருமான வரி பாக்கித் தொகை தொடா்பாக தீபாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அந்த நோட்டீஸ் தற்போது திரும்பப் பெறப்பட்டுவிட்டது.

மேலும், வரி பாக்கித் தொகையான ரூ.36 கோடியை, ரூ.13 கோடியாக குறைத்து திருத்தி அமைக்கப்பட்ட நோட்டீஸ் மீண்டும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, ரூ.36 கோடி செலுத்தும்படி அனுப்பிய நோட்டீஸை வருமான வரித் துறை திரும்பப் பெற்றுவிட்டதால், நோட்டீஸை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

மேலும், ரூ.13 கோடியைச் செலுத்தக் கோரி அனுப்பியுள்ள நோட்டீஸை எதிா்த்து தீபா சட்டப்படி நிவாரணம் கோர உரிமை உள்ளது என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest