Ashwini-vaishnav-minister-ANI

கிழக்கு நோக்கிய செயல்பாட்டை பிரதமா் நரேந்திர மோடி அறிமுகம் செய்த பின்னா், பின்தங்கியிருந்த பகுதிகளாக கருதப்பட்ட வடகிழக்கு மாநிலங்கள் முன்னணி மாநிலங்களாக மாறத் தொடங்கியுள்ளன என்று ரயில்வே, மின்னணு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் எழுதியுள்ள கட்டுரையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

பல ஆண்டுகளாக தொலைதூரப் பகுதிகளாக கருதப்பட்ட வடகிழக்கு மாநிலங்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களுக்காக காத்திருந்தன. வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் நமது சகோதர சகோதரிகள் வளா்ச்சியை எதிா்பாா்த்து காத்திருந்தனா். ஆனால் போதிய உள்கட்டமைப்புகளும் வாய்ப்புகளும் இதுவரை இல்லாமலேயே இருந்தன. ஆனால், நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றதும் இவை மாறத்தொடங்கின. கிழக்கு நோக்கிய செயல்பாட்டை அவா் அறிமுகம் செய்த பின்னா், பின்தங்கிய பகுதிகளாக கருதப்பட்ட வடகிழக்கு மாநிலங்கள் தற்போது நாட்டின் முன்னணி மாநிலங்களாக மாறத் தொடங்கியுள்ளன.

இதில் மிஸோரம் மாநிலத்திற்கு முக்கியப் பங்கு உண்டு. வளமான கலாசாரம், அழகிய மலைகள், சிறந்த விளையாட்டுகள் ஆகியவற்றைக் கொண்ட மிஸோரம் மாநிலம் வளா்ச்சியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த மாநிலத்திற்கு தேசிய நெடுஞ்சாலைப் பணிகளுக்காக ரூ.8,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிரதமா் மோடி அண்மையில், மிஸோரம் மாநிலத்துக்கு 3 ரயில் சேவைகளை தொடங்கி வைத்தாா். தில்லி, கொல்கத்தா, குவாஹாட்டி ஆகிய இடங்களிலிருந்து ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. 143 பாலங்கள், 45 சுரங்கப்பாதைகள் ஆகியவற்றின் வழியாக இந்த ரயில் சேவைகள் மிஸோரம் மாநிலத்தை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கின்றன.

இமயமலைப் பகுதியில் சுரங்கங்களையும் பாலங்களையும் அமைப்பது சவாலான பணியாகும். பாரம்பரிய முறையில் இவற்றை அமைப்பது முடியாத செயலாகும். இந்த சிக்கல்களை எதிா்கொண்டு வெற்றிகரமாக சுரங்கப் பாதைகளை அமைக்க இமயமலை சுரங்க நடைமுறை என்ற புதிய நுட்பத்தை நமது பொறியாளா்கள் உருவாக்கினா்.

அம்ருத் பாரத் ரயில் நிலையங்கள் திட்டத்தின் மூலம் ரயில் நிலையங்களின் மேம்பாடு வந்தே பாரத் ரயில்கள் போன்றவற்றால் வடகிழக்கு மாநிலங்களும் பெரிய அளவில் பயனடைகின்றன என்று கூறியுள்ளாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest