
உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பல்ராம்பூர் மாவட்டத்தில் சட்டவிரோத மற்றும் மதமாற்ற நடவடிக்கை இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் சங்கூர்பாபா என்ற ஜலாலுதீன் மற்றும் நஸ்ரின் என்பவரும் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இருவரும் சேர்ந்து பொருளாதாரத்தில் பின்தங்கியோர், ஏழைகள், ஆதரவற்றோருக்கு நிதி அளிப்பதாகவும், கணவரை இழந்த பெண்களை திருமணம் செய்துகொள்வதாகவும் மிரட்டல் விடுத்தும் மதமாற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதால், அவர்கள் இருவரையும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர். இவர்கள் இருவரும் நாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வேலைகளில் ஈடுபடவிருந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
ஜலாலுதீனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணயில், நேபாளத்தின் எல்லையில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் பிறந்து, சைக்கிளில் வளையல் விற்று, கிராமத் தலைவராகவும் ஜலாலுதீன் இருந்து வந்தது தெரிய வந்தது.
மேலும், அவருக்கு 40 வங்கிக் கணக்குகளில் ரூ.106 கோடி இருக்கிறது. இவையனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பெறப்பட்டுள்ளது.
அவருக்கு எப்படி திடீரென இவ்வளவு பணம் கிடைத்தது. ஒரு பெரிய சொகுசு பங்களாவின் ஒரு பகுதியில் அவரது குடும்பத்தினரும், மற்றொரு பகுதியில் அவரின் ஆதரவாளர்கள் தங்க வைக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார்.
ஆனால், அந்தக் கட்டடமானது சட்டவிரோதமானது எனக் கண்டறியப்பட்ட நிலையில், அதுவும் இடிக்கப்பட்டு விட்டது.
மதம் மாற்றப்பட்டவர்களுக்கு பணம் அளிக்கப்பட்டதா? அவை சட்டவிரோதச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டதா? என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது.