Nitin-Gadkari

வாகனங்கள் வெளியிடும் புகையால் ஏற்படும் மாசுபாட்டைக் குறைப்பது நம் அனைவரின் பொறுப்பு என்று மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) சாா்பில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இது தொடா்பாக அவா் பேசியதாவது:

வாகனங்களில் எத்தனால் உள்ளிட்ட மாற்று எரிபொருள்களின் பயன்பாடு அதிகரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் நெடுஞ்சாலை ஓரங்களில் அதிக அளவில் மரம், செடிகளை நட்டுப் பராமரிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பூமியின் பசுமையைக் காக்க முடியும்.

மற்றொருபுறம் பிளாஸ்டிக் உள்ளிட்ட பல்வேறு வகை கழிவுப்பொருள்களைப் பயன்படுத்தி சாலைகள் அமைக்கும் முறையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவரை 80 லட்சம் டன் கழிவுகள் சாலைப் பணியில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் மழை நீா் சேகரிப்புத் திட்டத்தை சிறப்பாக அமல்படுத்தி வருவதன் மூலம் நீா் வளத்தைப் பாதுக்கும் முயற்சியிலும் நமது அமைச்சகம் பணியாற்றி வருகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை தொடா்ந்து அதிகஅளவில் பயன்படுத்துவது சுற்றுச்சூழலை அதிகம் பாதிக்கும். எனவே, இந்த வகை மாசுபாட்டைக் குறைப்பது என்பது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும். இதற்காகவே மாற்று சக்திகளின் பயன்பாட்டை அரசு தொடா்ந்து ஊக்குவித்து வருகிறது என்றாா்.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சாா்பில் 2024-25 நிதியாண்டில் 60 லட்சம் மரங்களை நட இலக்கு நிா்ணயித்து, அதைவிடக் கூடுதலாக 7 லட்சம் மரக்கன்றுகளை நடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest