
பிகாா் மாநிலத்தில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார்.
பிகாரில் நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. இதற்கு எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.
இதை எதிா்த்து பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்துள்ள மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளன.
இந்த நிலையில், வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கு எதிராக மகாபந்தன் கூட்டணி சார்பில் பாட்னாவில் இன்று போராட்டம் நடத்தப்படுகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் தேஜஸ்வி யாதவ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் பொதுச் செயலர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளார்.
பாட்னாவுக்கு வருகைதந்த ராகுல் காந்திக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து திறந்தவெளி வாகனத்தில் பேரணியாகச் செல்லும் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவுள்ளனர்.