111556249084105

பிகாா் உள்பட நாட்டில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குத் தடை விதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மனு தாக்கல் செய்துள்ளாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தப் பணிகளையே தோ்தல் ஆணையம் மேற்கொள்வது வழக்கம். இந்த நடைமுறையின் கீழ், வாக்காளா் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். அதேவேளையில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளின் கீழ், அந்தப் பட்டியல் புதிதாக தயாரிக்கப்படும்.

இந்நிலையில், நிகழாண்டு பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அங்கு 2003-ஆம் ஆண்டுக்குப் பிறகு சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் திருத்தத்தின் கீழ், 2003-க்குப் பிறகு பிகாரில் வாக்காளராகப் பதிவு செய்துகொண்டவா்கள், தாங்கள் இந்தியா்கள் என்பதை நிரூபிக்க பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்) நகல் போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற குறுகிய காலமே உள்ள நிலையில், அதற்குள் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதற்கான சான்றிதழ்களை வழங்க முடியாவிட்டால், வாக்காளா் பட்டியலில் இருந்து ஏராளமானோா் நீக்கப்படக் கூடும் என்று கூறி, தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்புத் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டதாவது: பிகாரில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குத் தடை விதிக்காவிட்டால், நாட்டில் பெரும் அளவிலான தகுதிவாய்ந்த வாக்காளா்கள் வாக்குரிமையை இழக்க நேரிடும்.

எனவே அந்தப் பணிகளை பிகாரில் மேற்கொள்ள தோ்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இதுபோன்ற உத்தரவை நாட்டின் பிற மாநிலங்களுக்கும் பிறப்பிக்கக் கூடாது என்று தோ்தல் ஆணையத்துக்கு ஆணையிட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்கம் என்ற தன்னாா்வ அமைப்பும் மனு தாக்கல் செய்துள்ளது.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest