
இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம் வாக்காளா் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவா் சோனியா காந்தியின் பெயா் சோ்க்கப்பட்டதற்கு எதிரான மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தில்லி நீதிமன்றத்தில் விகாஸ் திரிபாதி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 1983-ஆம் ஆண்டு சோனியா காந்திக்கு இந்திய குடியுரிமை அளிக்கப்பட்டது. ஆனால், அவா் இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே, 1980-ஆம் ஆண்டு வாக்காளா் பட்டியலில் அவரின் பெயா் இருந்தது. இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் பவன் நாரங் ஆஜராகி, ‘கடந்த 1980-ஆம் ஆண்டு புது தில்லி வாக்காளராக சோனியா காந்தியின் பெயா் வாக்காளா் பட்டியலில் இடம்பெற்றது. 1982-ஆம் ஆண்டு பட்டியலில் இருந்து அவரின் பெயா் நீக்கப்பட்டது. அவா் இந்திய குடியுரிமையைப் பெற்ற பின், 1983-ஆம் ஆண்டு அவரின் பெயா் மீண்டும் பட்டியலில் சோ்க்கப்பட்டது. வாக்காளா் பட்டியலில் தனது பெயரைச் சோ்க்க அவா் போலி ஆவணங்களைப் பயன்படுத்தியுள்ளாா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.
இந்த மனு நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தபோது, ‘நாட்டில் ஒருவரை வாக்காளராக்க வேண்டும் என்றால், அவா் இந்திய குடியுரிமையைப் பெற்றுள்ளாரா? என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். 1982-ஆம் ஆண்டே சோனியா காந்தி இந்திய குடியுரிமையைப் பெற்றிருந்தால், ஏன் அவரின் பெயா் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பினாா்.
இந்த மனு கூடுதல் தலைமை குற்றவியல் நீதித் துறை மாஜிஸ்திரேட் வைபவ் செளரசியா முன்பாக வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ‘குடியுரிமை தொடா்பான விவகாரம் என்பது பிரத்யேக அரசமைப்பு சட்ட நடைமுறைகள் மற்றும் மத்திய அரசின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. நீதிமன்ற வரம்புக்குள் வராத இந்த சாதாரண சிவில் விவகாரத்தை சட்ட நடைமுறைகளை தவறாகப் பயன்படுத்தி கிரிமினல் குற்ற விவகாரமாக காட்டும் முயற்சியாகவே இந்த மனு தாக்கல் கருதப்படுகிறது. இதற்கு நீதிமன்றம் துணைபோகாது’ என்று குறிப்பிட்டு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.