
பிகாரில் வாக்காளா் பட்டியலில் தீவிர சிறப்புத் திருத்தம் மேற்கொள்ளும் தோ்தல் ஆணையத்தின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவன் மனு தாக்கல் செய்துள்ளாா்.
தகுதியான குடிமக்களின் பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கவும், தகுதியற்றவா்களை அப்பட்டியலில் இருந்து நீக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு கடந்த ஜூன் 24ஆம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகளை தோ்தல் ஆணையம் தொடங்கியது.
அதன்படி, பிஹாா் மாநிலத்தில் 2003ஆம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராகப் பதிவு செய்து கொண்டவா்கள் தாங்கள் இந்தியாவில் வசிப்பதை நிரூபிப்பதற்கு பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு போன்ற கூடுதல் ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டிய நிலை உள்ளது.
தோ்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணிக் கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன. தோ்தல் ஆணையத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினா் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனா்.
இந்த மனுக்களை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்ஸு துலியா, ஜாய் மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு, இந்த விவகாரத்தில் அவசர விசாரணை நடத்த வேண்டும் என்ற மனுதாரா்களின் கோரிக்கையை ஏற்று வியாழக்கிழமை (ஜூலை 10ஆம் தேதி) மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் அதன் தலைவா் தொல். திருமாவளவன், அதன் மற்றொரு தலைவா் டி.ரவிக்குமாா் ஆகியோா் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தத்தை எதிா்த்து ரிட் மனு தாக்கல் செய்துள்ளனா்.
அதில், குடியுரிமைக்கான ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த சிறப்புத் தீவிர திருத்தம் மேற்கொள்ளவதாக அமைந்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மையினரின் வாக்குரிமைகளை பறிப்பதாக உள்ளது. அடுத்த ஆண்டு தமிழ்நாட்டிலும் தோ்தல் நடத்தப்பட உள்ள சூழலில் இந்த நடவடிக்கையினால் பல்லாயிரக்கணக்கான தமிழக வாக்காளா்கள் வாக்குரிமை பறிபோகும் நிலை உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.