rahulgandhi

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, 2024 மக்களவை தேர்தல் மற்றும் அதற்கடுத்த 4 மாதங்களில் நடைபெற்ற மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், பா.ஜ.க-வுடன் சேர்ந்து இந்திய அரசியலமைப்புக்கு எதிரான குற்றச் செயலில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டி வருகிறார்.

இதனை மறுத்த தேர்தல் ஆணையம், ராகுல் காந்தி ஆதாரங்களை வெளியிடட்டும் என்று கூறியது.

அதற்கேற்றாற்போல, ராகுல் காந்தி நேற்று (ஆகஸ்ட் 7) டெல்லியில் சிறப்பு செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து, தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்ற வாக்காளர் பட்டியலை வைத்து ஆய்வுசெய்த ஆதாரங்களை வெளியிட்டார்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அந்த ஆதாரங்களில், லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 32,000 வாக்குகள் வித்தியாசத்தில் பா.ஜ.க வேட்பாளர் தோற்கடித்த பெங்களூரு மத்திய தொகுதியில் ஒரு லட்சம் போலி வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர் என்று ராகுல் காந்தி விளக்கினார்.

குறிப்பாக, அந்த மக்களவைத் தொகுதியில் மகாதேவபுரா சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் போலி வாக்காளர்கள் (11,965), போலி முகவரி (40,009), ஒற்றை முகவரி (10,452), போலி புகைப்படம் (4,132), படிவம் 6 முறைகேடு (33,692) என்ற ஐந்து வழிகளில் முறைகேடு நடந்திருக்கிறது என்றார்.

இந்த ஒரு தொகுதியில் முறைகேடு நடந்திருப்பதைப் போல மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும் பெரிய அளவில் முறைகேடு நடந்திருக்கிறது என நம்புவதாகவும், குறைந்த பெரும்பான்மையுடன்தான் மோடி இன்று பிரதமராக இருக்கிறார் என்றும் கூறினார்.

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் ஆணையம், இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் ஒரு பிரமாணப் பத்திரத்தில் கையெழுத்திட்டுத் தருமாறும், அப்படிக் கையெழுத்திடவில்லை என்றால் குற்றச்சாட்டுகள் பொய் என நாட்டு மக்களிடம் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கூறியது.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

அப்போதும்கூட, குற்றச்சாட்டுகள் தவறாக இருந்தால் அரசியலமைப்பின்படி இயங்கும் அரசு இயந்திரத்தின்மீது பொய்யான குற்றச்சாட்டு வைத்ததற்காக நடவடிக்கை எடுப்போம் என்று தேர்தல் ஆணையம் கூறவில்லை.

இந்த நிலையில், தேர்தல் முறைகேடு ஆதாரங்களை வெளியிட்ட அடுத்த நாளான இன்று பெங்களூரூவில் நடைபெற்ற காங்கிரஸ் பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொண்டார்.

அதில் உரையாற்றிய ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையம் என்னிடமிருந்து பிரமாணப் பத்திரம் கேட்கிறது. அதில் நான் ஒரு சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும் என்று கூறுகிறது.

ஆனால், நான் ஏற்கனவே நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பின் மீது சத்தியப்பிரமாணம் செய்துவிட்டேன்.

இன்று நாட்டு மக்கள் எங்கள் ஆதாரங்கள் குறித்துக் கேள்விகேட்கத் தொடங்கியதும், தேர்தல் ஆணையம் தனது வலைத்தளப் பக்கத்தை மூடியிருக்கிறது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

தேர்தல் ஆணையம் எங்களுக்கு மின்னணு தரவுகளை வழங்கினால், மோடி வாக்கு மோசடியால்தான் பிரதமரானார் என்பதை நாங்கள் உறுதியாக நிரூபிப்போம்.

அதற்கு, தேர்தல் ஆணையத்திடம் எங்களின் கோரிக்கை என்னவென்றால், முழு நாட்டின் மின்னணு வாக்காளர் பட்டியலையும், தேர்தல்கள் தொடர்பான வீடியோ பதிவுகளை எங்களுக்கு அவர்கள் வழங்க வேண்டும்.

இவை கிடைத்தால், நாடு முழுவதும் எத்தனை தொகுதிகளில் முறைகேடு நடந்திருக்கிறது என்பதை நாங்கள் நிரூபிப்போம்.

பா.ஜ.க-வும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து கூட்டாக அரசியலமைப்பைத் தாக்குகின்றன.

இதிலிருந்து தப்பித்துவிடலாம் என்று அவர்கள் தவறாக நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால், நான் சொல்வதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், `இந்த முறைகேட்டை நிரூபிக்க நேரம் எடுக்கும், ஆனால் ஒவ்வொருவராக உங்கள் அனைவரையும் நாங்கள் பிடிப்போம்’.

தேர்தல் ஆணையம் ஏன் மின்னணு தரவு மற்றும் வீடியோ பதிவுகளை வழங்கவில்லை என்ற கேள்வியை முழு நாடும் கேட்க வேண்டும்.

மோடி - தேர்தல் ஆணையம்
மோடி – தேர்தல் ஆணையம்

தேர்தல் ஆணையத்திடம் 5 கேள்விகளை நாங்கள் முன்வைக்கிறோம்.

* டிஜிட்டல் மற்றும் இயந்திரம் படிக்கக்கூடிய வடிவத்திலான (machine-readable format) வாக்காளர் பட்டியலை ஏன் வழங்கவில்லை?

* வீடியோ ஆதாரங்களை ஏன் அழிக்கிறீர்கள்?

* வாக்காளர் பட்டியலில் ஏன் மிகப்பெரிய மோசடியைச் செய்கிறீர்கள்?

* எங்கள் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்குப் பதில் ஏன் எங்களை அச்சுறுத்துகிறீர்கள்?

* ஏன் பா.ஜ.க-வின் முகவராக நடந்துகொள்கிறீர்கள்?’.

நீங்கள் எங்களிடமிருந்து எதையும் மறைக்கவோ அல்லது உங்களை நீங்கள் மறைக்கவோ முடியாது.

ஒரு நாள் இல்லை இன்னொரு நாள், நீங்கள் எங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்” என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest