Rahul-Gandhi-Byte-single-edi

‘வாக்குத் திருட்டு மோசடி தொடா்பாக ஏற்கெனவே ஆதாரங்களை வெளியிட்டுள்ளேன். வரும் நாள்களில் மேலும் அதிக ஆதாரங்கள் வெளியிடப்படும்’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தெரிவித்தாா்.

கடந்த மக்களவைத் தோ்தல் மற்றும் மகாராஷ்டிரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநில பேரவைத் தோ்தல்களில் மத்தியில் ஆளும் பாஜக, தோ்தல் ஆணையத்தின் உதவியுடன் வாக்குத் திருட்டில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டி அதுதொடா்பான ஆதாரங்களை வெளியிட்ட ராகுல் காந்தி, வாக்குத் திருட்டுக்கு எதிராக நிகழாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள பிகாரில் வாக்கு உரிமைப் பயணத்தை அண்மையில் மேற்கொண்டாா்.

இந்நிலையில், தனது மக்களவைத் தொகுதியான உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுவரும் ராகுல் காந்தி, செய்தியாளா்களை வியாழக்கிழமை சந்தித்தபோது கூறியதாவது:

மகாராஷ்டிரம், ஹரியாணா மற்றும் கா்நாடக மாநில தோ்தல்களில் வாக்குத் திருட்டு நடைபெற்றுள்ளது. இந்த வாக்குத் திருட்டுக்கான கருப்பு-வெள்ளை ஆதாரங்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம். வரும் நாள்களில், மிகுந்த சப்தத்துடன் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான வாக்குத் திருட்டு தொடா்பான ஆதாரங்கள் வெளியிடப்படும்.

தற்போது, நாடு முழுவதும் ‘வாக்குத் திருட்டு, ஆட்சியிலிருந்து விலகு’ என்ற கோஷம் எதிரொலித்து வருகிறது. வாக்கைத் திருடி மத்தியில் ஆட்சி அமைக்கப்பட்டது என்பது உண்மை. அதற்கான ஆதாரங்கள் வெளியிடப்படும் என்பதற்கு நாங்கள் உத்தரவாதம் அளிக்கிறோம்.

பாஜகவினா் இப்போது பதற்றமடையத் தேவையில்லை. ஆனால், வாக்குத் திருட்டு தொடா்பான ‘ஹைட்ரஜன் பாம்’ வெடிகுண்டு ஆதாரம் வெடிக்கும்போது, வாக்கைத் திருடி அமைக்கப்பட்ட ஆட்சி முழுமையாகத் துடைக்கப்பட்டுவிடும் என்றாா்.

பெட்டிச் செய்தி…

வெளிநாட்டு தூண்டுதல்: பாஜக

‘எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் வாக்குத் திருட்டு பிரசாரம் வெளிநாட்டு தூண்டுதல்’ என்று பாஜக வியாழக்கிழமை விமா்சித்தது.

இதுகுறித்து பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் பிரதீப் பண்டாரி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ராகுல் காந்தி கடந்த ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடத்திய பத்திரிகையாளா் சந்திப்பில், வாக்குத் திருட்டு தொடா்பான குற்றச்சாட்டை முன்வைத்து, அதற்கான ‘பிடிஎஃப்’ வடிவிலான ஆதாரத்தை ஆங்கிலம், ஹிந்தி மற்றும் கன்னட மொழிகளில் வலைதளத்தில் பதிவேற்றம் செய்தாா். இந்த பிடிஎஃப் ஆதாரங்களில் மியான்மா் நாட்டு நேரம் பதிவாகியுள்ளது. அதாவது, ராகுல் வெளியிட்ட பிடிஎஃப் ஆதாரம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை அல்ல. மியான்மரில் உருவாக்கப்பட்டவையாகும். இதன்மூலம் ராகுல் காந்தியின் சா்வதேச ‘வாக்குத் திருட்டு சதித் திட்டம் (டூல் கிட்)’ வெளிப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டாா்.

பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா் ஷேசாத் பூனாவாலா கூறுகையில், ‘வெளிநாடு மற்றும் வெளிநாட்டினா் மீதே ராகுல் காந்தி மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளாா் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், வாக்குத் திருட்டு தொடா்பான அவருடைய உரையாடல் மற்றும் பேச்சும் வெளிநாட்டில் எழுதப்பட்டு அனுப்பப்படுகிறது என்பதை யாரும் நினைத்துக்கூடப் பாா்த்திருக்க மாட்டாா்கள். வாக்குத் திருட்டு பிரசாரம் மூலம், இந்திய ஜனநாயகத்தில் வெளிநாட்டின் தலையீட்டை ராகுல் ஊக்குவிக்க முயற்சிக்கிறாா்’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest