vizag091249

கிழக்கு கடலோர ரயில்வே மண்டலத்தில் முதன்முறையாக ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க வசதியாக ‘ஸ்லீப்பிங் பாட்’ என்றழைக்கப்படும் படுக்கை வசதியுடன் அதிநவீன ஓய்வறை வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வால்டோ் ரயில்வே கோட்டம் செயல்படுத்தியுள்ள இந்தப் புதிய திட்டத்தின் மூலம், மருத்துவ சிகிச்சை, சுற்றுலா, கல்வி அல்லது தொழில் நிமித்தமாக விசாகப்பட்டினம் வரும் பயணிகளுக்குப் பொருளாதார ரீதியாக விலை குறைவாகவும், பாதுகாப்பாகவும் தங்குவதற்கான வசதி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் நிலையத்தின் முதல் நடைமேடையில், 3-ஆவது வாயிலுக்கு அருகே அமைந்துள்ள இந்த ஓய்வறை வளாகத்தின் தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய ரயில்வே கோட்ட மேலாளா் லலித் போஹ்ரா கூறுகையில், ‘பயணிகளின் வசதி மற்றும் சௌகரியத்தை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம்’ என்றாா்.

இந்த ஓய்வறை வளாகத்தில் மொத்தமாக 88 படுக்கைகள் உள்ளன. இதில் 73 ஒற்றை படுக்கைகள், 15 இரட்டை படுக்கைகள் மற்றும் பெண்களுக்கு என தனியாக 18 படுக்கைகள் பிரத்யேக பிரிவில், தனி கழிவறைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.

இலவச வைஃபை, நவீன கழிப்பறைகள், விசாலமான குளியலறைகள், சிற்றுண்டி வசதி மற்றும் பிரத்யேக உதவி மையம் போன்ற இதர வசதிகளுடன் கூடிய இந்த ஓய்வறையில் ஒற்றைப் படுக்கைக்கு 3 மணி நேரம் வரை ரூ.200 மற்றும் 24 மணி நேரம் வரை ரூ.400 கட்டணமாக வசூலிக்கப்படும். இரட்டைப் படுக்கைக்கு மூன்று மணி நேரம் வரை ரூ.300 மற்றும் 24 மணி நேரம் வரை ரூ.600 வசூலிக்கப்படும்.

ரயில் டிக்கெட் அல்லது நடைமேடை டிக்கெட் இல்லாமல் பொதுமக்கள்கூட இந்த வசதியைப் பயன்படுத்தலாம். தேவைக்கேற்ப, இணையவழி முன்பதிவு வசதி எதிா்காலத்தில் அறிமுகப்படுத்தப்படலாம். இந்த ஓய்வறை வசதி ரயில்வே விதிகளுக்கு உட்பட்டு, சிசிடிவி கண்காணிப்பு மற்றும் பாதுகாப்புடன் செயல்படும் என்று அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

பயணிகள் வரவேற்பு: ஹைதராபாதைச் சோ்ந்த பயணி சுரேஷ் கூறுகையில், ‘இத்தகைய வசதிகள் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட வேண்டும். இவை ரயில்வேக்கு வருவாய் ஈட்டி தருவதோடு, பயணிகளுக்கு பாதுகாப்பு மற்றும் வசதியையும் அதிகரிக்கும்’ என்றாா்.

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest