
திமுகவை வீழ்த்துகிற சக்தி அதிமுகதான் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
தவெகவுக்கு வரும் கூட்டம், வாக்குகளாக மாறும் என்று கூறப்படும் நிலையில், இதுகுறித்து முன்னாள் அமைச்சரும் அதிமுக துணைப் பொதுச்செயலருமான ஆர்.பி.உதயகுமாரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
மதுரை தெப்பக்குளத்தில் செய்தியாளர்களுடன் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், 52 ஆண்டுகால வரலாற்றுடன் அதிமுகவும், 75 ஆண்டுகால வரலாற்றுடன் திமுகவும் இருப்பது மக்கள் அறிவார்கள். நிரந்தர வாக்கு வங்கியைக் கொண்டிருக்கிற இயக்கமாக முதலிடத்தில் அதிமுக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து திமுக, பாஜக, காங்கிரஸ் இருக்கின்றன.
ஆகையால், புதிதாய் வந்தவர்கள் பரீட்சையே எழுதாமல், பாஸ் ஆகி விடுவேன் என்பது அவர்களின் நம்பிக்கை. அது வரவேற்கக் கூடியதாக இருந்தாலும், பரீட்சையை எழுதட்டும். அவர் என்ன மதிப்பெண் பெறுகிறார்? என்பதைப் பார்த்துவிட்டு விவாதிப்போம். இப்போதுதான் அவர் படித்துக் கொண்டிருக்கிறார்.
திமுகவை வீழ்த்துகிற சக்தி, அதிமுகவுக்குத்தான் உண்டு. ஆகையால், திமுகவுக்கு மாற்று அதிமுக. இது, காலங்காலமாக தமிழக மக்கள் அளித்துவருகிற தீர்ப்பு. அதிமுகவின் 52 ஆண்டுகால வரலாற்றை அவர் படிக்க வேண்டும்.
சக்தியும் ஆற்றலும் வலிமையும் அனுபவமும் கிளைக் கழகமும் தொண்டர்களும் மக்கள் செல்வாக்கும் கொண்ட அதிமுகதான், திமுகவை வெல்லும் என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: சொல்லப் போனால்… உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே!