
விமானத்தில் அடிக்கடி பயணம் செய்பவர்களும், விமான இருக்கையை முன்பதிவு செய்பவர்களும் ஒரு விஷயத்தை நிச்சயம் கவனித்திருப்பார்கள், அதுதான் 13வது இருக்கை எண் ஒதுக்கப்படாமல் இருப்பது.
இது ஏதோ தவறுதலாக நடந்த நிகழ்வு அல்லவாம். மக்களின் மனதை அறிந்தே, விமான நிறுவனங்கள், இருக்கைகளுக்கு எண் ஒதுக்கும்போது 12-ஐ அடுத்து 14 என எண் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
உலகம் முழுவதும் உள்ள நம்பிக்கை மற்றும் உண்மை நிலவரங்களை மதித்தே, விமான சேவை நிறுவனங்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிலர், இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாவிட்டாலும், சில பயணிகள், 13வது இருக்கை எண்ணால் சற்று கலக்கம் அடைவதாகவும் கூறப்படுகிறது. பொதுவாக விமானத்தில் பயணிப்பது என்பதே மக்களுக்கு ஒரு அச்சத்தையும் பதற்றத்தையும் உருவாக்கும். அப்படி இருக்கையில், புதிதாக பயணிப்பவர்களுக்கு, இந்த எண் மேலும் மன உளைச்சலை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
அது மட்டுமல்ல, இந்த 13ஆம் எண்ணைப் பார்த்து பயப்படுபவர்களின் அச்சத்துக்கு ஒரு பெயரும் இருக்கிறது. அதுதான் த்ரிஸ்கைடேகபோபியா. இந்த 13ஆம் எண் பற்றிய பயம் இன்று நேற்றல்ல… 1911ஆம் ஆண்டு முதல் இருந்து வருவதாக, அமெரிக்க மனநலத்துக்கான இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 13ஆம் எண் கெடுபயனைக் கொடுக்கும் என்பது, மத ரீதியாகவும், மூடநம்பிக்கையாகவும், வரலாற்றுப் பதிவுகள் மூலமும் உருவானதாகக் கூறப்படுகிறது.