
அந்த இரண்டு யானைகளும் இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து ஜப்பானுக்குக் கிளம்பின (1924). டோக்கியோவின் யுவெனோ (Ueno) மிருகக்காட்சி சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டன. ஆணொன்றும் பெண்ணொன்றாகவும் இருந்த அந்த யானைகளுக்கு வைக்கப்பட்ட பெயர், `ஜோன்’ மற்றும் `டோங்கி.’ அந்த யானைகள் ஆரம்ப நாள்களில் ஜப்பான் வாழ்க்கைக்குப் பழகச் சிரமப்பட்டாலும், நாளடைவில் தம்மைச் சூழ்நிலைக்கேற்றவாறு மாற்றிக் கொண்டன. யானைகளைப் பார்ப்பதற்கென்றே மிருகக்காட்சி சாலைக்குக் குழந்தைகள் கூட்டம் கூட்டமாக வந்து போயினர். யானைகளைக் கண்டு குஷியில் குதித்தனர். ஜோனும் டோங்கியும் அந்த மிருகக்காட்சி சாலையின் அடையாளமாகிப் போயின.
இரண்டாம் உலகப்போர் காலகட்டம். எதிரிகளின் போர் விமானங்கள் மிருகக்காட்சி சாலையில் தாக்குதல் நடத்தலாம்… அப்போது பெரிய மிருகங்களும், ஆட்கொல்லி மிருகங்களும் கூண்டுகளை உடைத்துக்கொண்டு தப்பித்து ஊருக்குள் புகுந்துவிட்டால்?
டோக்கியோ மேயராக இருந்த ஸீஜியொ ஒடாச்சி, மனிதத்தன்மையை வெளியே எடுத்து எறிந்துவிட்டு கட்டளை ஒன்றைப் பிறப்பித்தார். ‘மிருகங்களுக்கு விஷம் கொடுத்துக் கொன்று விடுங்கள்.’ பல மிருகங்கள் மடிந்துபோயின. யானைகள் அதிபுத்திசாலிகளாயிற்றே… ஜோனும் டோங்கியும் விஷம் கலந்த உணவை உண்ணாமல் தவிர்த்தன. அவர்கள் நினைத்திருந்தால் அந்த இந்திய யானைகளைச் சுட்டுக் கொன்றிருக்கலாம். சற்றே இரக்கத்துடன் மெல்லச் சாகட்டும் என்று அவற்றைப் பட்டினி போட்டார்கள்.

1943, செப்டம்பரில் மிருகக்காட்சி சாலையில் கொல்லப்பட்ட மற்ற மிருகங்களுக்கான இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போதும் ஜோனும் டோங்கியும் கூண்டுக்குள் குற்றுயிரும் குலையுயிருமாகக் கிடந்தன. பின்பு சில நாள்களில் மரித்துப்போயின.
இரண்டாம் உலகப் போர் முடிந்து, உருக்குலைந்து கிடந்த ஜப்பானில் குழந்தைகள், சற்றே இயல்பு நிலைக்குத் திரும்புவதற்காக யுவெனோ மிருகக்காட்சி சாலைக்கு வந்தனர். அங்கே பறவைகளும் சிறு விலங்குகளும் மட்டுமே இருந்தன. யானைகள் இல்லை. எந்தக் குழந்தையின் கண்களிலும் பரவசம் எழவே இல்லை.
உலகின் ஆகச்சிறந்த படைப்புகள் எவை எனப் பட்டியலிட்டால், அதில் நிச்சயம் யானைக்கு இடம் உண்டு. இந்தியாவில் கி.மு.6000 சமயத்திலேயே யானைகள், மனிதர்களால் பழக்கப்படுத்தப்பட்ட விலங்காக இருந்ததற்கான குகை ஓவியங்கள் சான்றாக இருப்பதை வரலாற்றாளர் லாஹிரி சௌத்ரி குறிப்பிடுகிறார். காட்டு யானைகள் பிடிக்கப்பட்டு அவை போர்களுக்காகப் பயன்படுத்தப்பட்டன. சந்திரகுப்த மௌரியர், யானைப்படை வைத்திருந்திருக்கிறார். அர்த்தசாஸ்திரம், யானைகளை எப்படிக் கையாள வேண்டும் என்று விவரிக்கிறது. பேரரசர் அசோகர், யானைகளுக்கான மருத்துவமனையை நடத்தியிருக்கிறார். `போரஸ்’ என்கிற புருஷோத்தமன், யானைமீது ஏறி வந்த கம்பீரத்தைக் கண்டு மாவீரர் அலெக்ஸாண்டருக்கே வியர்த்திருக்கிறது. இப்படி இந்தியாவின் முற்கால வரலாற்றில் யானை என்பது போர்களுக்கான விலங்காகவே அறியப்படுகிறது.
‘போர்க்களத்தில் இறந்துகிடந்த யானைகள் ஒன்றன்மீது ஒன்றாகக் குவிந்து கிடந்தன. அவை யானைகள் என்று தெரியாத அளவுக்கு அவற்றின்மீது அம்புகள் பாய்ந்திருந்தன. அது பார்ப்பதற்கு மலைகளில் மொய்க்கும் குருவிக் கூட்டம்போல் இருந்தது’ என்று பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான களவழி நாற்பது, போர்க்காட்சி ஒன்றை விளக்குகிறது. தமிழ்நாட்டின் மூவேந்தர்களிடமும் யானைப் படைகள் இருந்தன. ஒவ்வோர் அரசனும் தனது வலிமையை நிரூபிக்க யானைப் படைகளையே பெரிதும் நம்பியிருந்தான் என்பதைச் சங்க இலக்கியங்கள் மூர்க்கமாகவும் தீர்க்கமாகவும் காட்சிப்படுத்துகின்றன.
நம் மண்ணின் அரசர்களெல்லாம் யானைகளைப் போர்க்களத்தில் வீழ்த்தினார்களே தவிர, காடு புகுந்து வேலை மெனக்கிட்டு வேட்டையாடவில்லை. ஆனால், யானைகளோடு அதிகம் பழகாத வெள்ளைக்காரர்களுக்கு, அந்தப் பிரமாண்ட மிருகத்தை வேட்டையாடி வீழ்த்துவதில் அட்ரினலின் அதிகம் சுரந்ததுபோல. யானை வேட்டை, யானை மீதேறி வேட்டையையெல்லாம் வழக்கப்படுத்திக்கொண்டார்கள். ‘ஆஹா, யானைகளைவைத்து இவ்வளவு வேலைகள் வாங்கலாமா!’ என்று தெரிந்துகொண்டு ‘காரியம்’ சாதித்தார்கள். அதற்காகவே அதிக அளவில் காட்டு யானைகளைப் பிடித்துப் பழக்கப்படுத்தினார்கள். `மாவுத்தன்’ என்றழைக்கப்படும் யானைப் பாகன்களுக்கு நல்ல கிராக்கி இருந்தது.

காட்டு யானைகளைப் பிடிப்பதற்கென்றே இந்தியாவில் பழக்கத்திலிருந்த பழைமையான முறை, குழிவெட்டிப் பிடிப்பது. இது குறித்து அகநானூற்றின் பதிமூன்றாம் பாடலில் போகிற போக்கில் குழிவெட்டி வைத்திருக்கிறார் பெருந்தலைச் சாத்தனார். குழி முறையைக் கொஞ்சம் விரிவாக நீள, அகலங்களுடன் சொல்ல வேண்டுமென்றால்…
ஐந்து மீட்டர் ஆழம், மேலே நான்குக்கு நான்கு மீட்டர் நீள, அகலத்தில் சதுரமான குழி. அடிப்பாகம் மூன்றுக்கு மூன்று மீட்டர் அளவில் இருக்க வேண்டும். சற்றே சாய்வாக இருந்தால்தான், பிடிபட்ட யானையை மேலே கொண்டு வரத் தோதாக இருக்கும். குழியின் பாதியிலிருந்து மேல்மட்டம் வரை மூங்கில்களால், மரக்கிளைகளால் நிரப்பி மூடப்படும். அங்கே குழி இருக்கிறதென்றே தெரியாத அளவுக்கு இலைகளும் சருகுகளும் போடப்படும். ‘ஆனைக்கும் அடி சறுக்கும்’ என்ற சொற்கள் இங்கே பொருந்தும். தினசரி ஒருவர் வந்து குழிக்குள் யானை கிடக்கிறதா என்று பார்த்துவிட்டுப் போவார். இல்லையென்றால் உள்ளே விழுந்த யானை பிளிறும் ஒலியே பல மைல்கள் தொலைவுக்குக் கேட்கும்.
லெஃப்டினென்ட் ஆர்தர் என்பவர் எழுதிய, ‘Memoir of Travancore’ (1810) புத்தகத்தில் அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குழிவெட்டி யானைகள் பிடிக்கப்பட்டது குறித்த செய்திகள் இருக்கின்றன. யார் வேண்டுமானாலும் காட்டிலோ, அவர்களுக்குச் சொந்தமான நிலத்திலோ குழிவெட்டி வைத்துக் கொள்ளலாம். அதில் விழுந்த யானை விற்கப்பட்டால், அதற்கேற்ப வரியை அரசாங்கத்துக்குக் கட்டிவிட வேண்டும். 1810-ம் ஆண்டுக்குப் பிறகு, அரசும் யானைக்காகக் குழிகளை வெட்டிவைத்தது. ஆகவே, மக்கள் வெட்டுவது, ‘இனாம் குழி’ என்று அழைக்கப்படலானது. இனாம் குழியில் விழுந்த யானையை மக்கள், அரசுக்கு விற்றால் ரூ.150 வரை வழங்கப்பட்டதாகக் குறிப்பு இருக்கிறது.
குழியில் விழுந்த யானைகளில் சில இறந்துபோயின. சில காயங்களுடன் அவதிப்பட்டன. சில தப்பித்துப்போயின. சில தப்பித்துச் சென்றும் காயங்களால் இறந்துபோயின. ஆக, குழி புகுந்தவற்றில் சுமார் பாதி அளவு யானைகளே ஆரோக்கியமாக மீட்கப்பட்டன. 1870-களில் இப்படிக் குழிவெட்டி யானைகளைப் பிடிக்கும் முறை கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. ஆகவே இனாம் குழிகள் தடைசெய்யப்பட்டன.
யானை வேட்டை, குழிவெட்டிப் பிடிக்கப்படுதல், தந்தத்துக்காகக் கொல்லப்படுதல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில், 1873-ம் ஆண்டில் Madras Wild Elephants Preservation Act கொண்டுவரப்பட்டது. அதை அடிப்படையாகக்கொண்டு 1879-ம் ஆண்டில், The Elephants’ Preservation Act கொண்டுவரப்பட்டது.
இவற்றின் விளைவாக, காட்டு யானைகளைப் பிடிக்க இன்னொரு பழைமையான முறையான கேதா (Khedda) அதிகம் பயன்படுத்தப்படலானது. அந்த இந்திச் சொல்லுக்கு ‘ஓரிடத்தை நோக்கி ஓட்டுதல்’ என்று பொருள் வரும். அகழி போன்ற அமைப்பு. அதனுள் செல்ல ஒரே ஒரு மரப்பாலம். பழக்கப்பட்ட பெண் யானை ஒன்று ஆபரேஷனில் ஈடுபடுத்தப்படும். அதைக் கண்டு மயங்கி ஆண் யானைகள், ‘நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன், போ போ போ…’ என்று பின்தொடரும். அகழிக்குள் யானைகள் வந்த பிறகு மறைந்திருந்து நோட்டமிடும் ஆட்கள் வெளியே வருவார்கள். அந்த மரப்பாலத்தை உடைத்துவிடுவார்கள். அந்த அப்பாவி யானைகள் வெளியேற வழியில்லாமல் உள்ளே சிக்கிக்கொள்ளும். சில நாள்கள் ஆகாரம், நீர் இல்லாமல் தவிக்க விடுவார்கள். பின்பு கும்கி யானைகள் களமிறக்கப்படும். காட்டு யானைகளைப் பழக்கப்படுத்தும் பயிற்சிகள் ஆரம்பமாகும். ரத்தமின்றி, உயிரிழப்பின்றி யானைகளைக் கூட்டமாகப் பிடிக்க இந்த கேதா முறை உதவியது.
மைசூர் காடுகளில் கேதா முறையை மிகச்சரியாக உபயோகித்து, காட்டு யானைகளைப் பிடித்த பிரிட்டிஷ் அதிகாரி, ஜார்ஜ் P. சாண்டர்ஸன். மைசூரில் 53 காட்டு யானைகளை ஒரே ஆபரேஷனில் ரத்தமின்றி, உயிர்ச் சேதாரமின்றிப் பிடித்தது இவரது பெரும் சாதனை. 1876-ம் ஆண்டில் சிட்டகாங்கில் ஒரே ஆபரேஷனில் யானைகளும் குட்டிகளுமாக 85 தும்பிக்கையோன்களை உயிருடன் வசப்படுத்தியிருக்கிறார்.

காட்டு யானைகளைப் பின்தொடர்ந்து கவனித்து, அவற்றோடு பழகி, அவை குறித்த தகவல்களையெல்லாம் முறையாக, விரிவாகப் பதிவுசெய்த முதல் பிரிட்டிஷ்காரர் இவரே. யானைகளைக் கொல்லக் கூடாது என்பதில் அக்கறை காட்டியவர். பழக்கப் படுத்திய யானைகள் மீதேறி, ஆற்றில் இறங்கி குத்தீட்டிகளை நீரில் பாய்ச்சி மீன் பிடிப்பது இவருக்குப் பிடித்த பொழுதுபோக்காக இருந்தது. ‘யானை ராஜா’ என்ற செல்லப் பெயருடன் விளங்கிய சாண்டர்ஸன், தனது 44-வது வயதில் மெட்ராஸில் இறந்துபோனார். சாண்டர்ஸன் எழுதிய ‘Thirteen Years Among the Wild Beasts of India’ என்ற நூலில், அவர் இன்னமும் யானைகளோடு உலவிக்கொண்டுதான் இருக்கிறார்.
யானைகளைப் பற்றிப் பேசும்போது, பிரிட்டிஷாரின் காலனியாக இருந்த இலங்கையைத் தவிர்க்க முடியாது. அங்கும் யானைகள் அதிகம். யானைகளைவைத்து அவர்கள் வேலை வாங்கியதும், வேட்டையாடியதும் மிக அதிகம். சிலோன் சரித்திரத்தில் வேட்டை மன்னராக முத்திரை பதித்தவர் மேஜர் தாமஸ் வில்லியம் ரோஜர்ஸ்.
1824. ரோஜர்ஸ் இலங்கைக்கு வந்தார். புதிய குடியிருப்புகளை, தேயிலைத் தோட்டங்களை, இன்ன பிற தொழிற்சாலைகளை உருவாக்கும் பிரிட்டிஷாரின் முயற்சிகள் தீவிரமடைந்திருந்தன. அதற்கு உள்ளூர் மக்களின் எதிர்ப்பெல்லாம் இல்லை. மண்ணின் மைந்தர்களான யானைகளே வனம் காக்கப் போராடின. ‘என் துப்பாக்கிக்கு முன் எந்தக் கொம்பன் யானையும் பூனையே’ என்று களமிறங்கினார் ரோஜர்ஸ். தோட்டாக்கள் யானைகளின் நெற்றியைத் துளைத்தன. 12 ஆண்டுகளில் சுமார் 1,400 யானைகள் மேஜரால் கொல்லப்பட்டன என்று ஒரு கணக்கு உண்டு. அதற்கு மேலும் இருக்கலாம் என்று உறுதியாகச் சொல்கிறார்கள்.
உள்ளூர் மக்கள், மேஜரை வில்லனாகவோ, வேட்டை வெறிபிடித்த குற்றவாளியாகவோ பார்க்கவில்லை. யானைகளிடமிருந்து தங்களைக் காக்க வந்த சாமியாகவே வணங்கினர். வேட்டையின்போது யானைகள் தாக்கிக் காயமடைந்த சம்பவங்களும் மேஜருக்கு உண்டு. அப்போதெல்லாம் தப்பித்தவர், 1845-ம் ஆண்டில் மின்னல் தாக்கி இறந்தார். இலங்கையின் நுவரேலியாவில் மேஜருக்குக் கல்லறை அமைக்கப்பட்டது. அதை யானைகள் சேதப்படுத்திவிடக் கூடாது என்பதற்காக, சுற்றி அகழியும் அமைத்தார்கள். ஆனால், கல்லறையையும் ஒரு முறை மின்னல் தாக்கிச் சேதப்படுத்தியது. மேஜரைத் தாக்கிய மின்னல்கள் மின்னிய போது முழங்கிய இடியொலி, யானைகளின் பிளிறல்போல இருந்திருக்க வாய்ப்பு உண்டு.
இலங்கையில் யானை வேட்டை வெறிபிடித்த ஆளாக மேஜர் ரோஜர்ஸைச் சொல்லலாமென்றால், காலனி ஆதிக்க ஆப்பிரிக்காவிலும் அதற்கும் மேலான வெறியர்கள் இருந்திருக்கிறார்கள்.
`ஹாரி மேனர்ஸ்’ என்றழைக்கப்பட்டவர், பிரிட்டிஷ்–ஜெர்மன் பெற்றோர் கூட்டணியில் பிறந்த வேட்டைக்காரர். சென்ற நூற்றாண்டில் தென்னாப்பிரிக்காவிலும், ஆப்பிரிக்கக் கண்டத்தின் காடுகளிலும் துப்பாக்கியுடன் திரிந்த இவரது ஆப்பிரிக்க யானை வேட்டைக் கணக்கு சுமார் 1,000 வரை இருக்கலாம். ஹாரியைப்போல தந்தத்துக்காகவே ஆப்பிரிக்க யானைகளைக் கொன்றுகுவித்த இன்னொரு ரத்தவெறித் திலகம், ஃபிரெடரிக் டெஃப் பேங்க்ஸ். ஆயிரத்தைத் தாண்டி கொன்றிருக்கிறார் என்று வேழத்தின் குருதியால் குறிப்பு எழுதி வைத்திருக்கிறார்கள். ‘The Wanderings of An Elephant Hunter’ என்று தனது பெருமைகள், பீற்றல்களை எழுதிவைத்திருக்கும் ஸ்காட்லாந்துக்காரரான வால்டர் கராமோஜோ பெல் என்பவரது ஆப்பிரிக்க யானை வேட்டைக் கணக்கு 1,101. தென்னாப்பிரிக்க வாழ் ஆங்கிலேயரான ஹென்றி ஹார்ட்லேவின் கணக்கு 1,200. ஸ்காட்லாந்துக்காரரான ஜே.ஏ. ஹன்ட்டரின் கணக்கு சுமார் 1,400. ‘அதுகூட + 200 போட்டுக்கோங்க’ என்று போட்டிக்கு நிற்கிறார் இன்னொரு ஸ்காட்லாந்துக் காரரான ஜிம் சதர்லேண்ட்.

ஆஸ்திரேலியாவில் பிறந்த பீட்டர் பியர்ஸன், உகாண்டாவில் யானைகளைக் கட்டுப்படுத்தும் அதிகாரியாக இருந்தவர். இவரது வேட்டைக் கணக்கு இரண்டாயிரத்துச் சொச்சம் என்கிறார்கள். நியூசிலாந்தில் பிறந்த சாமாகி சால்மன், உகாண்டாவில் அதே பிரிவில் அதிகாரியாக இருந்தவர். யானைகளைக் கட்டுப்படுத்துவதைக் கண்ணும் கருத்துமாகச் செய்துவந்த இவரது துப்பாக்கி, சுமார் 4,000 யானைகள் வரை சுட்டிருக்கலாம். இவரே மனிதகுலத்தின் ஆகப்பெரிய யானை வேட்டைக்காரராக இருக்கலாம் என்பது அதிகாரபூர்வமற்ற தகவல். `ஒரே நாளில் 40 யானைகளைக் கொன்றவர்’, `ஒரேமூச்சில் 14 தோட்டாக்களைக்கொண்டு 12 யானைகளைச் சுட்டவர்’ என்று இவரது சாதனைக் கணக்கு கிலியூட்டுகிறது.
இங்கே ஒரு கவித்துவ க்ளைமேக்ஸையும் பதிவுசெய்துவிடலாம். 1,200 யானை வேட்டை புகழ் ஹென்றி ஹார்ட்லே, ஒரு காண்டாமிருகத்தைச் சுடும்போது, அது காயங்களுடன் அவர்மீது பாய்ந்து விழுந்தது. அதில் உண்டான காயங்களால் ஹென்றிக்கு பரலோக ராஜ்ஜியத்துக்கு பாஸ்போர்ட் கிடைத்தது. ரெஸ்ட் இன் பீஸ்!
இந்தியாவில் யானை வேட்டை குறித்தும் பார்த்துவிடுவோம்.
இங்கும் தந்தங்களுக்காக யானைகள் அதிக அளவில் வேட்டையாடப்பட்டன. பிரிட்டிஷாரின், மகாராஜாக்களின், வேட்டைப் பிரியர்களின் கௌரவக் கொழுப்புக்காக, துப்பாக்கிகள் யானைகளைக் குறிபார்த்தன. ஆனால், ஆப்பிரிக்காவோடு ஒப்பிட்டால், வேட்டையாடப்பட்ட யானைகளின் எண்ணிக்கை குறைவே. அஸ்ஸாமிலேயே அதிக அளவு யானை வேட்டை நடந்தது எனலாம்.
பல மகாராஜாக்கள் யானை மீதேறி வேட்டைக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். அதற்காகவே யானைகளுக்கு முறையான பயிற்சிகளும் அளிக்கப்பட்டிருந்தன. கூச் பிகார் சமஸ்தானத்தின் மகாராஜாவாக இருந்த நிருபேந்திர நாராயணின் வேட்டைக் கணக்கை மட்டும் பார்ப்போம். சமஸ்தான மகாராஜாக்களில் அதிதீவிர வேட்டை வெறியர். 1871 தொடங்கி 1907 வரை தனது அனுபவங்களை ‘Thirty-seven years of big game shooting in Cooch Behar, the Duars, and Assam’ என்ற புத்தகமாகவே செதுக்கியிருக்கிறார். 365 புலிகள், 311 சிறுத்தைகள், 207 காண்டாமிருகங்கள், 133 கரடிகள், 318 சதுப்பு நில மான்கள், 259 கடமான்கள், 48 காட்டெருமைகள் என்று தனது வேட்டைக் கணக்கைத் தெளிவாகக் காட்டியிருக்கும் நிருபேந்திர நாராயண், யானைகளை வேட்டையாடவில்லை.
டொனால்டு ஆண்டர்ஸன், ஆங்கிலோ இந்தியர். காடுகளில் இவர் வேட்டையாடிய விலங்குகளுக்குக் கணக்கே கிடையாது. யானைகளின் ரத்தத்தையும் இவரது தோட்டாக்கள் ருசி பார்த்திருக்கின்றன. இந்தியாவில் வாழ்ந்து மறைந்த கடைசி வெள்ளையின வேட்டைக்காரர் இவரே. மற்றபடி ஒரு மேஜரோ, கர்னலோ, வால்டரோ ஆயிரக்கணக்கான யானைகளை வீழ்த்தினார் என்று கணக்கு காட்டும் அவல புள்ளிவிவரம் இங்கே இல்லை. அந்தவிதத்தில் இந்தியாவின் புலிகளும் சிறுத்தைகளும் சிங்கங்களும் பாவப்பட்டவையே.
பிரிட்டிஷார், இந்தியாவில் பல்வேறு கட்டமைப்புகளை உருவாக்கியதில் யானைகள் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. தெளிவாகச் சொன்னால், வருத்தப்பட்டு பாரம் சுமந்திருக்கின்றன. அணைகள், பெரிய கட்டடங்கள், ரயில் பாதைகள், சாலைகள், மலைப் பாதைகள், பாலங்கள், துறைமுகங்கள் உருவாக்கத்தில் களிறுகளே பெரும்பங்கு வகித்திருக்கின்றன. தோட்ட வேலைகளில் அதிகம் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. ரயில் இன்ஜின்கள் பற்றாக்குறையாக இருந்த கடினமான சூழல்களில், யானைகளைவைத்து ரயில் பெட்டிகளை இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இந்தியாவில் ரயில்வே பணிகளுக்காக, ஊழியராக இருந்து சம்பளம் வாங்கிய யானைகளும் உண்டு.
யானைகளை நம் மண்ணிலிருந்து அதிக அளவில் ஏற்றுமதி செய்த பெருமை, கிழக்கிந்திய கம்பெனியையே சாரும். மெட்ராஸில் துறைமுகம் ஆரம்பிக்கப் படுவதற்கு முன்பாக, கப்பல்கள் கடலில் தொலைவிலேயே நிறுத்தப்பட்டன. அவற்றிலிருந்து சரக்குகளையும் பயணிகளையும் படகுகளில் ஏற்றினார்கள். `யானைகள் கடலில் நீந்திச் சென்று, அந்தப் படகுகளைக் கரையை நோக்கித் தள்ளிக் கொண்டு வந்தன’ என்று வரலாற்றாசிரியர் ஆர்.வெங்கடேஷ் பதிவுசெய்திருக்கிறார். யானைகள் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் சிறிய ரக போர் விமானங்களையும் இழுத்திருக்கின்றன. குறிப்பிட்ட இடத்திலிருந்து விமானங்களை ஓடுதளப் பாதைக்குக் கொண்டு செல்ல உதவியிருக் கின்றன. உலகப் போர்கள் உள்ளிட்ட பல்வேறு போர்களில், பிரிட்டிஷாருக்காக இந்திய யானைகள் பங்கு பெற்றிருக்கின்றன. பலியாகியிருக்கின்றன.
அபிசீனியா ராஜ்ஜியத்தின் (இன்றைய எத்தியோப்பியா) அரசர் இரண்டாம் டெவோட்ரோஸ் சில மிஷனரி ஊழியர்களையும், பிரிட்டிஷ் அதிகாரிகளையும் சிறைப்பிடித்து வைத்திருந்தார். அவர்களை மீட்க, பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து கிளம்பிச் சென்றார்கள் (1868). பம்பாயிலிருந்து கிளம்பிய கப்பல்களில் 44 யானைகளும் ஏற்றப்பட்டன. 16,000 கழுதைகள், 6,000 ஒட்டகங்கள், 3,000 குதிரைகள் என்று மிகப்பெரிய செலவில் மேற்கொள்ளப்பட்ட யுத்தம் இது. பெரிய பீரங்கிகளையும், ஆயுதங்களையும் சுமந்து செல்ல யானைகள் பயன்படுத்தப்பட்டன. போருக்கான முன் தயாரிப்புகளிலும், சாலைகள், பாதுகாப்பு அரண்கள் அமைப்பதிலும் யானைகளே பெரிதும் உதவின. போர்க்களத்தில் ஐந்து யானைகள் தம் இன்னுயிரைத் துறந்து பிரிட்டிஷாருக்கு வெற்றி தேடித் தந்தன. அரசர் டெவோட்ரோஸ் தற்கொலை செய்து கொண்டார். அந்த ராஜ்ஜியத்தில் கொள்ளையடித்த செல்வங்களை, பின்பு பதினைந்து யானைகள் மூலம் பிரிட்டிஷார் லண்டனுக்குச் சுமந்து சென்றார்கள்.
யானைகள் இழுக்கும் வண்டிகளை வைத்துக்கொள்வதை மகாராஜாக்கள் கௌரவமாக நினைத்தார்கள். ஒற்றை யானை இழுக்கும் சாதா வண்டி முதல் நான்கு யானைகள் இழுக்கும் ரதங்கள் வரை புழக்கத்தில் இருந்தன. விருந்தினர்களோ, துரைமார்களோ வந்தால், ‘யானை வண்டில ஏறிப்போய் ஊர்சுத்திப் பாத்துட்டு வாங்க’ என்று அனுப்பிவைத்தார்கள். வைஸ்ராயை வரவேற்க யானையை அலங்கரித்து, ஜொலி ஜொலிக்கும் ஹௌதாவில் ஏற்றி, பவுசாக ஊர்வலம் அழைத்து வரும் சம்பிரதாயமும் இருந்தது. 1903, 1911 ஆகிய ஆண்டுகளில் நடந்த டெல்லி தர்பார் ஊர்வலங்களில் பல மகாராஜாக்கள் தம் டாம்பீகத்தைப் பறைசாற்ற அலங்கரிக்கப்பட்ட யானைகள் மீதும், யானை வண்டிகள்மீதும் ஏறியுமே ஊர்வலம் வந்தனர்.

ஹென்றி மேரியோன் துராந்த். இவர் வங்க மாகாணத்தின் ராணுவத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றியவர். 1857, சிப்பாய்ப் புரட்சியை அடக்கியதில் பங்கு வகித்தவர். 1871-ம் ஆண்டில் பஞ்சாப் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராகப் பதவியேற்றார். டாங்க் சமஸ்தானத்தின் (இன்றைய பாகிஸ்தான் பஞ்சாப்பில் இருக்கிறது) நவாப் அழைப்பை ஏற்று அங்கே சென்றார்.
அலங்கரிக்கப்பட்ட யானை காத்திருந்தது. ஹௌதாவிலிருந்த நவாப் அன்புடன் அழைத்தார். ஹென்றி மேரியோனும் மிடுக்குடன் ஏறி அமர்ந்தார். ஊர்வலம் ஆரம்பமானது. நவாப்புடன் ‘ராஜாங்க விஷயங்களை’ பேசியபடியே சென்றபோது, தாழ்வாக இருந்த ஒரு நுழைவாயிலைக் கவனிக்கவில்லை. யானை அதுபாட்டுக்கு நுழைவாயிலுக்குள் தன்னைப் புகுத்தியது. உயர்ந்த மனிதரான ஹென்றி மேரியோன், நுழைவாயிலில் மோதி, நிலை தடுமாறிக் கீழே விழுந்தார். முதுகெலும்பில் பலத்த காயம். அன்றே மரித்துப்போனார். நவாப் தப்பித்திருந்தார். யானை அம்பாரி, ஹென்றி மேரியோனுக்கான ஒப்பாரி நிகழ்வாகிப் போனது.
அன்றைக்குப் புழக்கத்திலிருந்த டாம்பீகமான விளையாட்டுகளில் ஒன்று யானை போலோ. டெல்லி சுல்தான்கள் காலத்திலேயே யானைகள் மீதேறி போலோ ஆடியிருக்கிறார்கள். முகலாயர்கள் அதை விரும்பி விளையாடியிருக்கிறார்கள். ராஜஸ்தானத்து சமஸ்தானங்களில் இந்த யானை போலோ செழித்து வளர்ந்திருக்கிறது. பிரிட்டிஷாரின் விருப்பத்துக்குரிய விளையாட்டாகவும், பொழுதுபோக்காகவும் இருந்திருக்கிறது. இப்போது இந்தியாவில் விளையாடப்படுவதில்லை. நேபாளத்திலும் தாய்லாந்திலும் யானை போலோ போட்டிகள் நடைபெறுகின்றன.
யானை போலோ சாத்வீகமான விளையாட்டு. ஆனால், யானை மல்யுத்தம்? மகாராஜாக்களின் பொழுதுபோக்குகளில் ஒன்றாக, யானைகளை மோதவிட்டு வேடிக்கை பார்ப்பதும் இருந்தது. மகாராஜாவுக்குப் பிறந்தநாளா, அரண்மனையில் திருமணமா, ராணிக்குக் குழந்தை பிறந்திருக்கிறதா, இளவரசருக்குச் சோறு ஊட்ட வேண்டுமா, மன்னர்பிரான் சந்தோஷமாக இருக்கிறாரா, கோபத்தில் இருக்கிறாரா, வெட்டியாக இருக்கிறாரா… ‘யாரங்கே, யானைகளை மைதானத்துக்கு அழைத்து வாருங்கள்!’
பல்வேறு சமஸ்தானங்களின் சின்னங்களில் யானைகள் உண்டு. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இரண்டு பக்கமும் யானைகள் சங்கு ஒன்றை நோக்கி துதிக்கையைத் தூக்கியிருக்கின்றன. பரோடா சமஸ்தானத்தில் இரண்டு யானைகள் கதாயுதத்தை ஏந்தி நிற்கின்றன. கூச் பிகார் சமஸ்தானத்தில் யானையோடு சிங்கமும் ஒரு பக்கம் நிற்கிறது. சந்த் சமஸ்தானத்தில் இரு யானைகள் முன்னங்கால்களைத் தூக்கி மிரட்டுகின்றன. இப்படி யானைச் சின்னம் பல சமஸ்தானங்களிலும் எங்கும் வியாபித்திருந்தது. அதேபோல ‘யானைச் சண்டையும்’ வழக்கத்தில் இருந்திருக்கிறது. மிகப்பெரிய சமஸ்தானங்களுள் ஒன்றான பரோடோவில் வழக்கத்துக்கு அதிகமாகவே இருந்திருக்கிறது.
‘மகாராஜா, நாளை நம் சமஸ்தானத்துக்கு ரெஸிடெண்ட் வருகிறார்’ என்று தகவல் வந்தால் போதும். ‘அவர் தங்குவதற்கு, விருந்துக்கு, யானைச் சண்டைக்கு ஏற்பாடு செய்யுங்கள்’ என்று மகாராஜாவிடமிருந்து அனிச்சையாகவே உத்தரவு வந்துவிடும். ‘எம் சமஸ்தானத்தின் யானைகளின் கம்பீரத்தைப் பார்த்தீர்களா!’ என்று காட்சிப்படுத்துவது பிரதான நோக்கம்.
யானைகள்மீதான பிரிட்டிஷாரின் ஈர்ப்பு அடங்காதது. யானைச் சண்டையை நடத்தி, அதிகாரியைக் குஷிப்படுத்தினால் ஆக வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொள்ளலாம் என்பது உள்நோக்கம். இதற்காகவே பழக்கப்படுத்திய யானைகள் எப்போதும் தயாராக இருக்கும். அதற்கான மைதானத்தில் கூட்டம் அலைமோதும். யானைகளைத் தூண்டிவிடும் வஸ்துக்களை யெல்லாம் வாயில் தள்ளிவிட்டுத்தான் களத்தில் இறக்கிவிடுவார்கள். மேலே அமர்ந்திருக்கும் மாவுத்தன்களும் தேவைக்கேற்ப யானைகளைக் கட்டுப்படுத்துவார்கள். உசுப்பேற்றுவார்கள். மைதானத்தினுள் ஆயுதங்களேந்திய வீரர்களும் அநியாயத்துக்கு வெறியைத் தூண்டிவிடுவார்கள்.
வேழம் இரண்டும் மதம்கொண்டு முட்டும். அண்டம் கிடுகிடுங்க, ஆகாசம் நடுநடுங்க, காத்து சடசடக்க, காணும் நெஞ்சம் படபடக்க, அங்கே இடி முழங்கும்! வாரணங்கள் தந்தங்கள் கொண்டு குத்தும், கிழிக்கும். களிறுகளின் பிளிறலில் பார்ப்போர் உள்ளம் அலறும். இரண்டில் ஒரு வாரணம் மண்ணில் வீழும் வரை அந்த வெறியாட்டம் அடங்காது.
வேல்ஸ் இளவரசர் ஆல்பர்ட் எட்வர்ட், 1875-ம் ஆண்டில் இந்தியச் சுற்றுப்பயணம் செய்தபோது பரோடாவுக்கு வந்து யானைச் சண்டையின் ரத்த வாடையை அனுபவித்திருக்கிறார். பரோடா மகாராஜா திருமண வைபவத்தில் யானைகள் மோதி தம்மை வருத்திக்கொண்டன. மகாராஜாவின் பிறந்தநாள் விழாவில் யானைகள் குருதி சிந்துவதெல்லாம் மரபாகவே இருந்தது. இந்த யானைச் சண்டைகளில் பாகன்களும், சுற்றியிருக்கும் வீரர்களும், தவறி விழும் மக்களும் மிதிபட்டுச் சாவதுண்டு. அப்படி நிகழ்ந்தால் அது துரைமார்களுக்குக் கூடுதலான குதூகல வேடிக்கை, அவ்வளவே! மற்றுமொரு பகீர் குறிப்பு… 1875-ம் ஆண்டில் வேல்ஸ் இளவரசருக்காக பரோடா சமஸ்தானத்தில் காண்டாமிருகங்களையும் மோதவிட்டு வித்தை காட்டியிருக்கிறார்கள்.
1918-ம் ஆண்டில் பரோடா மகாராஜா சாயாஜிராவ், ‘லோக்கல் ஒலிம்பிக்ஸ்’ நடத்தியிருக்கிறார். ஆம், சர்வதேச ஒலிம்பிக்ஸைக் கண்டுகளித்த அவர், தனது சமஸ்தானத்திலும் அது போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தத் திட்டமிட்டார். `The Royal Baroda Gaekwad Olympics (RBGO)’ என்ற பெயரில் பரோடா சமஸ்தானத்தில் சுமார் 150 விதமான விளையாட்டுப் போட்டிகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. இந்தியர்கள் மட்டுமன்றி, ஆப்பிரிக்கா, ஆஸ்திரியா, ரஷ்யா, அமெரிக்கா, இரான், ஆப்கானிஸ்தான் என்று பல்வேறு நாடுகளிலிருந்து வீரர்கள் வந்து பங்கேற்றனர். இந்த பரோடா ஒலிம்பிக்ஸானது மகாராஜா சாயாஜிராவின் மறைவுக்குப் பிறகும் 1951-ம் ஆண்டு வரை கோலாகலமாக நடத்தப்பட்டிருக்கிறது. வீரர்களுக்கான போட்டிகள் தவிர, விலங்குகள், பறவைகளுக்கான போட்டிகளும் நடத்தப்பட்டு அவற்றுக்கும் மெடல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
பரோடா ஒலிம்பிக்ஸிலும் எல்லோரும் மிரட்சியுடன் கண்டுகளித்த பிரமாண்ட போட்டி, யானைச் சண்டைதான். ‘சாத்மாரி’ என்று அழைக்கப்பட்ட இந்தப் போட்டியில் சம பலமுள்ள இரண்டு யானைகள் 60 நிமிடங்கள் மோத வேண்டும். போட்டியின் முடிவில் எந்த யானை கெத்தாக, சத்தாக நிற்கிறதோ அதுவே வெற்றியாளர். அந்த யானையை போடியத்தில் ஏற்றி மெடல் அணிவித்தார்களா என்று தெரியவில்லை.

உலகம் முழுக்கப் பல்வேறு சர்க்கஸ்களை ஓஹோவெனப் புகழ்பெறச் செய்ததில் யானைகளுக்கு மிகப்பெரிய பங்கு உண்டு. இந்தியாவின் பழைய சர்க்கஸ் செய்தி ஒன்றை மட்டும் பார்ப்போம். ரேபா ரக்சித், கல்கத்தாவைச் சேர்ந்த பெண். யோகாவில் கரைகண்டவர். தன் யோகப் பயிற்சியால் எவ்வளவு எடையை வேண்டுமானாலும் தாங்கும் சக்தியை உருவாக்கிக்கொண்டவர். சர்க்கஸில் முதன்முதலாக ஒரு யானையைத் தன்மீது ஏறவைத்துச் சுமந்த பெண் கலைஞர் இவர்தான். 1950-களில் ரேபாவின் யானை வித்தை இடம்பெற்ற கமலா சர்க்கஸ், ஜெமினி சர்க்கஸ், இன்டர்நேஷனல் சர்க்கஸ் ஆகிய கம்பெனிகள் பெரும் புகழ் பெற்றன. யானைகளால் கொல்லப்பட்ட சர்க்கஸ் கலைஞர்கள் உண்டு. எந்த சர்க்கஸ் யானையும் ரேபாவை ஒருபோதும் காயப்படுத்தியதே இல்லை.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பே யானைகள், மரண தண்டனைகளை நிறைவேற்றப் பயன்படுத்தப் பட்டிருக்கின்றன. மனிதர்களின் தலையை மிதித்துக் கொல்வது. தந்தங்களால் உடலைக் கிழித்துக் கொல்வது. உடல் பாகங்களை பிய்த்தெறிந்து கொல்வது. இப்படி யானைகளால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகளில் ரகங்கள் இருந்திருக்கின்றன. இதற்காகப் பயிற்சியளிக்கும் திறமைமிகு பாகன்களும் இருந்திருக்கிறார்கள். கடைசி நொடியில்கூட குற்றவாளிக்கான மரண தண்டனை உத்தரவை மன்னர் மனமிரங்கி ரத்து செய்யலாம். அப்போதும் தூக்கிய காலை, பாகனின் கட்டளைக்கேற்ப பின்னெடுத்து வைக்க யானைகள் தயாராக இருக்க வேண்டும். அந்த நொடியில் பாகனுக்கு யானை கட்டுப்படவில்லையென்றால் தரையில் கிடக்கும் பிரகஸ்பதியின் ‘தலைவிதி’ அவ்வளவுதான்.
டெல்லி சுல்தான்களும், முகலாய மன்னர்களும் யானைகளைக்கொண்டு மரண தண்டனைகளை நிறைவேற்றிய பதிவுகள் இருக்கின்றன. மராத்திய மன்னர்களும், சமஸ்தானத்து மகாராஜாக்களும் யானைகளைக்கொண்டு கைதிகளைச் சிதைத்திருக்கிறார்கள். 1868-ம் ஆண்டில் லூயிஸ் ரூஸ்லெட் என்ற பிரெஞ்சுப் பயணி, மத்திய இந்தியாவில் யானையால் நிறைவேற்றப்பட்ட மரண தண்டனை குறித்துப் பதிவுசெய்திருக்கிறார். அது குறித்து வரையப்பட்ட ஓவியமும் புகழ் பெற்றது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பிரிட்டிஷாரின் ஆதிக்கம் இந்தியாவில் நிலைபெற்ற பிறகுதான் யானையைக்கொண்டு மரண தண்டனையை நிறைவேற்றும் வழக்கம் நிறுத்தப்பட்டது.
யானைக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட வரலாறு இருக்கிறது. அமெரிக்காவின் டென்னிஸி மாகாணத்தில் நடந்தது ஸ்பார்க்ஸ் சர்க்கஸ். 1916, மேரி என்ற ஆசியப் பெண் யானை அந்த சர்க்கஸின் ஸ்டார். புதிதாக வேலைக்குச் சேர்ந்த பாகனான ரெட் எல்ட்ரிட்ஜ், மேரி மீதேறி சர்க்கஸ் அரங்கினுள் நுழைந்தார். என்ன கோபமோ, மேரி அவரைத் தூக்கியடித்து வீசிக் கொன்றது. அப்போதே ‘கொலைகார யானையைக் கொல்லுங்கள்’ என்று மக்கள் முழக்கமிட்ட தாகவும், அதன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகவும் தகவல் உண்டு. அப்படியும் பிழைத்த மேரியை, சர்க்கஸ் முதலாளியான சார்லி ஸ்பார்க்ஸ், மக்கள் முன்னிலையில் தூக்கில் ஏற்றிக் கொன்றார்.
ஆரம்பத்தில் பார்த்த ஜப்பான் யுவனொ மிருகக்காட்சி சாலைக்கு மீண்டும் செல்வோம். இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அங்கே யானைகளே இல்லாமல் போயின அல்லவா… ஜப்பானியக் குழந்தைகள் வருத்தத்துடன் அரசுக்குக் கடிதம் எழுதினர். ‘இந்தியாவிலிருந்து யானைகளை வரவழையுங்கள்’ என்று கோரிக்கைவைத்தனர். ஜப்பானியக் குழந்தைகளின் கோரிக்கையாக அது இந்தியப் பிரதமர் நேருவை வந்தடைந்தது. ‘நாங்கள் கனவில் மட்டுமே கண்ட யானையை நேரிலும் காண உதவி செய்யுங்கள்’ என்று ஒரு குழந்தை கடிதத்தில் எழுதியிருந்தது.
நெகிழ்ந்த நேரு, உடனே நடவடிக்கை எடுத்தார். கர்நாடகாவிலிருந்து யானை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டது. நேரு அந்த யானைக்குத் தன் செல்ல மகள் பெயரையே வைத்தார். இந்திரா, 1949, செப்டம்பர் 25 அன்று யுவனோ மிருகக்காட்சி சாலையில் அடியெடுத்துவைத்தது. இந்திய – ஜப்பான் நல்லுறவின் அடையாளமாகவும் திகழ்ந்தது. இதேபோல பெர்லின் குழந்தைகளிடமிருந்தும் நேருவுக்குக் கோரிக்கை வர, 1952-ம் ஆண்டில் அங்கே `சாந்தி’ என்ற யானைக்குட்டியை அனுப்பிவைத்தார். 1955-ம் ஆண்டில் கனடாவுக்கு, பிரதமர் நேரு அனுப்பிவைத்த யானையின் பெயர் அம்பிகா.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு, நம் யானைகள் சர்வதேச அளவில் நல்லுறவை மேம்படுத்த நமக்கு உதவின.