1-1-trainengine42510chn76

விழுப்புரம்: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள பொறியியல் பணிகள் காரணமாக, ரயில்களின் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:

திருச்சி கோட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொறியியல் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் ரயில்கள் பகுதியளவு, முழுமையாக ரத்து, புறப்படும் இடம் மாற்றம், நிறுத்தி வைத்து இயக்கம் போன்ற பல்வேறு மாற்றங்கள் ரயில் போக்குவரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தாம்பரத்திலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்படும் தாம்பரம் – விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66045), ஆகஸ்ட் 23 ஆம் தேதி முண்டியம்பாக்கம் – விழுப்புரம் இடையே ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் தாம்பரத்திலிருந்து முண்டியம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 1.40 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் – சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வண்டி எண் 66046), ஆகஸ்ட் 23-ஆம் தேதி விழுப்புரம் – முண்டியம்பாக்கம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ரயில் முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல்1.55 மணிக்குப் புறப்படும்.

திருச்சியிலிருந்து முற்பகல் 11 மணிக்குப் புறப்பட வேண்டிய திருச்சி – சென்னை எழும்பூர் சோழன் விரைவு ரயில் (வண்டி எண் 22676), ஆகஸ்ட் 20-ஆம் தேதி மட்டும் சுமார் 1 மணி நேரம் 45 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 12.45 மணிக்குப் புறப்படும். மேலும் இந்த ரயில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமார் 15 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

கடலூர் துறைமுகத்திலிருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட வேண்டிய கடலூர் துறைமுகம் – மைசூரு விரைவு ரயில் (வண்டி எண் 16231), ஆகஸ்ட் 20-ஆம் தேதி சுமார் 50 நிமிடங்கள் தாமதமாக மாலை 4.30 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும்.

இதுபோன்று விழுப்புரம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்பட வேண்டிய விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் (வண்டி எண் 66019), ஆகஸ்ட் 23 ஆம் தேதி சுமார் 25 நிமிடங்கள் தாமதமாக பிற்பகல் 3 மணிக்குப் புறப்படும்.

விழுப்புரத்திலிருந்து காலை 5.25 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் – புதுச்சேரி பயணிகள் ரயில் (வண்டி எண் 66063), புதுச்சேரியிலிருந்து காலை 8.05 மணிக்குப் புறப்படும் புதுச்சேரி – விழுப்புரம் பயணிகள் ரயில் (வண்டி எண் 66064) ஆகிய ரயில்கள் ஆகஸ்ட் மாதம் 14,15,16,17,18,19, 21,22,23 ஆகிய தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூரிலிருந்து காலை 6.35 மணிக்குப் புறப்படும் சென்னை எழும்பூர் – புதுச்சேரி பயணிகள் (வண்டி எண் 66051) ஆகஸ்ட் 17 ஆம் தேதி வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 15 நிமிடங்களும், இதே ரயில் 19-ஆம் தேதி சுமார் 30 நிமிடங்களும், குருவாயூரிலிருந்து இரவு 11.15 மணிக்குப் புறப்படும் குருவாயூர் – சென்னை எழும்பூர் விரைவு ரயில் (வண்டி எண் 16128), ஆகஸ்ட் 13, 20 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் 30 நிமிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும்.

விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 2.35 மணிக்குப் புறப்படும் விழுப்புரம் – மயிலாடுதுறை பயணிகள் ரயில் ( வண்டி எண் 66019), ஆகஸ்ட் 20 ஆம் தேதி விழுப்புரம் – புதுச்சத்திரம் ரயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னர் இயக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Changes in Villupuram route train service

இதையும் படிக்க : பிரமாணப் பத்திரம் கொடுக்க அது என் தரவுகள் அல்ல, உங்களுடையது! – ராகுல்

Read more

Share with:
Facebook Twitter LinkedIn WhatsApp Pinterest