
வெறி நாய்க்கடிக்கும் ஆணுறுப்புக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது என்கிற, சென்னையைச் சேர்ந்த பாலியல் மருத்துவர் காமராஜ் அதுபற்றி இங்கே விளக்குகிறார்.

’’வெறி நாய் கடித்தால் உடனடியாக தடுப்பூசிப்போட வேண்டுமென்பது எல்லோருக்குமே தெரியும். அப்படி போடாதவர்கள் மரணமடையும் முன்னர் அவர்களுடைய ஆணுறுப்பில் கடுமையான விறைப்புத்தன்மை இருக்கும். இதற்கு பிரையாப்பிசம் (Priapism) என்று பெயர். பிரையாப்பஸ் என்பவர் கிரேக்க கடவுள். இவருடைய ஆணுறுப்பு எப்போதும் விறைப்புத்தன்மையுடன் இருக்கும் என்பதால், அவருடைய பெயரால் இந்தப் பிரச்னை அழைக்கப்படுகிறது.
நாய் கடித்திருக்கும். வளர்ப்பு நாய்தானே என்றோ அல்லது நாய்க்கு ஏற்கெனவே தடுப்பூசி போட்டிருக்கிறதே என்றோ, அலட்சியமாக விட்டிருப்பார்கள். இவர்களுக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்பதற்கான முதல் அறிகுறி, ஆணுறுப்பு எப்போதும் விறைப்புத்தன்மையுடன் இருப்பதுதான்.
நான் ராயப்பேட்டை மருத்துவமனையில் வேலைபார்த்துக்கொண்டிருந்தபோது, ரோட்டில் படுத்துக்கொண்டிருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மொத்த பேரையும் வெறி நாய் ஒன்று கடித்துவிட்டது. அந்தக் காலத்தில் நாய் கடித்தால் தொப்புளைச் சுற்றி ஊசி போட வேண்டும். தினமும் மொத்தக் குடும்பத்தினரும் ஊசிப் போட்டுக்கொள்ள வருவார்கள். ஆனால், அந்த குடும்பத்தலைவன் மட்டும் ஒன்றிரண்டு ஊசி மட்டும் போட்டதோடு நிறுத்திவிட்டார். விசாரித்ததில் வேலைக்கு சென்றுவிட்டார் என்றார்கள். கடைசியில் அவர் மட்டும் அந்த குடும்பத்தில் இறந்துபோனார். இப்படி ரேபிஸ் வந்து இறப்பவர்களுக்கு, முதலில் ஆணுறுப்பில் தொடர்ந்து விறைப்புத்தன்மை இருக்கும்.
வளர்ப்பு நாயோ அல்லது தெரு நாயோ, எது கடித்தாலும் காலதாமதம் செய்யாமலும் அலட்சியம் செய்யாமலும், உடனே தடுப்பூசிப் போட்டுக்கொள்ளுங்கள்’’ என்கிறார் டாக்டர் காமராஜ்.